Sunday, February 10, 2019

பெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி! நிச்சயம் தெரிந்துகொள்ளுங்கள்


சமீபகாலமாக ஒன் டைம் பாஸ்வேர்டு(OTP) என்று அழைக்கப்படும் கடவுச்சொல்லை வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து திருடுவதன் மூலம் அந்த நபரின் வங்கி கணக்குகளில் அவர்களுக்கு தெரியாமலேயே பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு பணம் திருட்டு நடைபெறுவது பெருகி வருகிறது. இந்த வகையான திருட்டில் இருந்து எப்படி மீள்வது, தப்பிப்பது
என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
இணைய மற்றும் மொபைல் வங்கி சேவைகளுக்கு ஒரு பாதுகாப்பு அம்சமாக இருந்து வருவதுதான் ஒன் டைம் பாஸ்வேர்டு(OTP). இந்த கடவுச்சொல் ஆனது பெரும்பாலும் 4 முதல் 6 இலக்கத்தில் ஒரு நபர் தனது வங்கி பரிவர்த்தனைகளை செய்யும்பொழுது அவரது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்த கடவு எண்ணை சரியாக உள்ளீடு செய்தால் மட்டுமே பரிவர்த்தனை முழுமை அடையும் வகையில் அனைத்து வங்கி சேவைகளும் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு ஒருவரது மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை அந்த நபருக்கு தெரியாமலேயே திருடுவதன் மூலமாகவோ அல்லது வங்கி அதிகாரி போல் போனில் பேசி ஒரு நபரின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண்களை பெற்றும் அப்போது பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வாடிக்கையாளருக்கு வரும் OTP எண்ணை கேட்டு பெறுவதன் மூலம் அந்த நபரின் வங்கி கணக்கை முழுமையாகவே கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சமீபத்தில் அதிகமாகி வருகிறது. 
சமீபத்தில் பெங்களூரில் ஒரு தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் ஒரே போன் காலில் மர்ம நபர் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மும்பை ஜார்கண்ட், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் பெருமளவில் அரங்கேறி வருகின்றன. கேரளாவில் மட்டும் இதுவரை பத்துக்கும் மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் இதைப்போன்று திருடப்பட்டுள்ளன. மேலும் மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வங்கி கணக்கை 28 முறை வங்கி அலுவலர் போல் பேசி அந்தப்பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 7 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்துள்ளனர்.
இதைப் போன்ற சம்பவங்கள் பெரும்பாலும் புதிதாக இணைய வழி வங்கி சேவையை துவங்குவோர், வயதானவர்கள் போன்றவர்களை குறிவைத்து அரங்கேற்றப்படுகிறது. இதைப் போன்ற கொள்ளை சம்பவங்களுக்கு முக்கிய காரணியாக இருந்து வந்தது OTP எண்கள் தான். இந்தப் OTP எண்களை இரண்டு வகைகளில் கொள்ளையர்கள் ஒரு நபரிடமிருந்து திருடுகின்றனர். 
அதில் ஒன்று, வங்கி வாடிக்கையாளர்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை தானாகவே படிப்பது. மற்றொன்று வங்கி வாடிக்கையாளர்களுக்கு கால் செய்து வங்கி அலுவலர் போல் பேசி அவருடைய வங்கி கணக்கு விவரங்களைப் பெற்று, மேலும் அவருக்கு வரும் OTP எண்ணை பகிர்ந்து கொள்ளும்படி கேட்பதன் மூலமும் இந்த கொள்ளை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இது குறித்த விழிப்புணர்வுகள் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் தேவை.
உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் குறுஞ்செய்திகளை தானாகவே படிப்பதற்காக பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை உங்கள் எண்ணிற்கு கொள்ளையர்கள் முதலில் அனுப்பி வைப்பர். அதிலுள்ள லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் எண்ணிற்கு வரும் அனைத்து மெசேஜ்களையும் அவர்களால் கண்காணிக்க முடியும். எனவே இதுபோன்ற உங்களுக்கு சம்பந்தமே இல்லாத கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் லிங்குகள் அனுப்பப்பட்டால் அதனை உடனே நீக்கிவிடுவது சிறந்தது.
அடுத்தது வங்கி அலுவலர் போல் பேசுபவர்களிடம் இருந்து எப்படி தப்புவது? உண்மையாகவே வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து உங்களுக்கு யாராவது கால் செய்தால் அவர்கள் நிச்சயம் உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளில் முழு விவரங்களை கேட்க மாட்டார்கள். குறிப்பாக CVV எண், கடவுச்சொல், உங்களுக்கு வரும் OTP எண் போன்றவைகளை கேட்க மாட்டார்கள். 
சில சமயங்களில் போன் கால்கள் மூலம் நீங்கள் டிக்கெட் புக் செய்யும் போதும், உணவு ஆர்டர் செய்யும் சமயங்களிலும் உங்களுக்கு எதிர்திசையில் உதவி புரியும் ஊழியர்கள் உங்களது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண்கள், பின் நம்பர், OTP போன்றவற்றை வார்த்தையால் சொல்லும்படி கேட்க மாட்டார்கள். மாறாக உங்களது மொபைல் கீபேடில் நீங்களே டைப் செய்யும்படி கூறுவார்கள். அப்படியில்லாமல் உங்களிடம் வார்த்தையால் கூறும்படி கேட்பவர்களிடமிருந்து நீங்கள் நிச்சயம் விழிப்பாய் இருக்க வேண்டும். அப்படி அவர்கள் கேட்கும் பட்சத்தில் உடனடியாக அந்த காலினை துண்டிப்பது உங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .