Wednesday, February 20, 2019

15 வருடப் பயணத்தை முடித்துக்கொண்ட “Rover”

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய நாசா அமைப்பு அனுப்பிய Opportunity Rover என்ற விண்கலம் தனது 15 வருட பயணத்தை முடித்துக்கொண்டுள்ளது.

2003 ம் ஆண்டு அனுப்பப்பட்ட Opportunity Rover, 2004 ம் ஆண்டு ஜனவரி மாதம் இறங்கி செவ்வாய் கிரகத்து இடங்களைப் படம் எடுத்து அனுப்பிக்கொண்டு இருந்தது. செவ்வாய் கிரகச் சூழ்நிலையை, அங்கே என்னென்ன உள்ளது என்பதை அறிய வாய்ப்பாக இருந்தது.
புழுதிப் புயலில் சிக்கிய Rover 
உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம், விண்கலம் இயங்க சூரிய ஒளி அவசியம் என்று. 2007 ம் ஆண்டு ஏற்பட்ட புழுதிப் புயலில் சிக்கி மண் படிமத்தால் Opportunity Rover விண்கலம் தொடர்பை இழந்தது, பின் மண் படிமம் விலகி செயல்பட ஆரம்பித்தது.
இதன் பிறகு 2018 வரை பெரிய பாதிப்பில்லாமல், இயங்கிக்கொண்டு இருந்தது.
ஆனால், 2018 ஜூன் மாதம் மீண்டும் ஏற்பட்ட புழுதிப் புயலில் சோலார் தகடுகளில் புழுதி படிமம் படிந்ததால், சூரிய ஒளியைப் பெற முடியவில்லை. இதனால் பூமியில் இருந்து விஞ்ஞானிகளால் Opportunity Rover விண்கலத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நவம்பர் முதல் ஜனவரி வரை செவ்வாய் கிரகத்தில் காற்று அதிகம் இருக்கும் காலம் என்பதால், காற்றின் காரணமாகச் சோலார் தகடுகளில் உள்ள புழுதிப் படிமம் விலகும் என்று காத்து இருந்தார்கள் ஆனால், அது நடக்கவில்லை.
பல முயற்சிகளுக்குப் பிறகு நாசா கடந்த வாரம் Opportunity Rover இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக வருத்தத்துடன் அறிவித்தார்கள்.
243.76 மில்லியன் கிலோமீட்டர்
243.76 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்த Opportunity Rover 15 வருடங்களில் 43 கிலோ மீட்டர் பயணம் செய்து படங்களை அனுப்பி உள்ளது.
243.76 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து இதை இயக்கி படம் எடுக்க வைத்து… ஷப்பா .. எனக்குக் கண்ணைக் கட்டுகிறது. வாய்ப்பே இல்லை.. அதுவும் 15 வருடங்கள்.. நினைத்தாலே பிரம்மிப்பாக உள்ளது.
எனக்கு ஒரே ஒரு வியப்பு 15 வருடங்கள் கூடி 43 கிலோமீட்டர் தான் இயக்க வைக்க முடிந்தது என்பது! ஆனால், இந்த 43 கிலோமீட்டர் பயணத்தில் Rover எடுத்துக்கொடுத்த படங்கள், தகவல்களின் மதிப்பு அளவிட முடியாதது.
இதன் படங்கள் வந்த போது இப்பயணத்தில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு எவ்வளவு ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கும் என்பதை நினைத்தாலே பரவசமாக உள்ளது.
சந்தேகம் 
செவ்வாய் கிரகத்தில் புவியீர்ப்பு விசை கிடையாது ஆனால், நாசா வெளியீட்டுள்ள அனிமேஷன் (பின்வரும் காணொளி பார்க்கவும்) உத்தேச காணொளியில் விண்கலம் உள்ள பாதுகாப்பு பந்து கீழ் நோக்கி வந்து பூமியில் பந்து குதிப்பது போல குதிக்கிறது.
இது எப்படி? யாராவது தெரிந்தவர்கள் விளக்கவும்!
தரமான சாதனங்கள்
15 வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு விண்கலத்தை அனுப்பிப் படம் எடுக்க வைத்து, இவ்வளவு காலம் அதைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்கள் என்றால், தற்போது இது போல ஒன்றை அனுப்பினால் அது எவ்வளவு முன்னேற்றத்துடன் கூடிய தொழில்நுட்பமாக இருக்கும்!
Rover வாகனத்தில் இருந்த சாதனங்கள் 15 வருட பருவ சூழ்நிலையைத் தாக்குப்பிடித்து வேலை செய்துள்ளது என்பதை நினைத்தால், தலை கிறுகிறுக்கிறது.
எவ்வளவு தரமான சாதனங்களாக அவை இருந்து இருக்க வேண்டும்! தற்போது கூட Rover பழுதடைந்து இறுதி மூச்சை விடவில்லை, புழுதிப் படலம் காரணமாகவே செயலிழந்துள்ளது.
உதாரணத்துக்கு யாராவது அங்கே இருந்து, அந்தப் புழுதிப் படிமத்தை துடைத்து விட்டால் திரும்ப வேலை செய்யத் துவங்கி விடும். அவ்வளோ தான்!
எனக்கு எப்போதுமே விண்வெளி சம்பந்தப்பட்டவை வியப்பை அளித்துக்கொண்டே இருக்கும். அதென்னமோ இது சம்பந்தப்பட்ட செய்திகள் தகவல்கள் என்றால், விருப்பமாகப் படிப்பேன்.
Opportunity Rover யைத் தயாரித்து, 15 வருடங்களாக அதைக் கட்டுப்பாட்டில் வைத்து, செவ்வாய் கிரகம் பற்றிய பல்வேறு அறிவியல் தகவல்களை நமக்கு அறியத்தந்த விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகளும் நன்றிகளும் 🙂 .
கொசுறு
நான் எழுதிய கட்டுரைகளில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளில் “மங்கள்யானும் விண்வெளி ஆச்சர்யங்களும்” கட்டுரை முக்கியமானது.
பலரின் எண்ணங்களைக் கேள்விகளை வியப்புகளை நான் கட்டுரையில் பிரதிபலித்ததாகப் பலர் கருத்திட்டு இருந்தனர். எனக்குச் சிறு மகிழ்ச்சி! 🙂 .
இதில் நண்பர் கௌரிஷங்கர் “விண்கலம் எப்படி விண்வெளியில் செல்கிறது” என்பதை எளிமையாகக் கருத்துப் பகுதியில் விளக்கியிருந்தார். எனக்கு வந்த சிறப்பான எளிமையான கருத்துகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.
இதுவரை படிக்கவில்லை என்றால், உங்களுக்கு விண்வெளியில் ஆர்வம் இருந்தால், இக்கட்டுரை படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .