Monday, February 18, 2019

கடன் தொல்லை… விடுபடுவது எப்படி? – ஸ்னோபால் வழிமுறைகள்


டன் வாங்குவதற்கு அவமானப்பட்ட காலம் போய், எதற்கெடுத்தாலும் கடன் வாங்குகிற நவீன உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். பர்சனல் லோன் வேண்டுமா, ஹோம் லோன் வேண்டுமா, கார் லோன் வேண்டுமா என வங்கிகளிலிருந்தும், நிதி நிறுவனங்களிலிருந்தும் அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இ.எம்.ஐ ஆஃபர் மூலம் நிறுவனங்களும் நம்மை கடன் வாங்கத் தூண்டுகின்றன. இந்தக் கடன்கள் மூலம் கிடைக்கும் வசதிகள் குறுகிய காலத்தில் நம்மை மகிழ்ச்சியில் கொண்டாட வைப்பது என்னவோ உண்மைதான். ஆனால், நீண்ட காலத்தில் நம்முடைய நிதி மற்றும் முதலீட்டு வாழ்க்கையைச் சிக்கலாக்கி விடுகிறது என்பதைப் பிறகுதான் உணர்கிறோம்.
குழந்தைகளின் படிப்புக்கு, திருமணத்துக்கு, உங்கள் ஓய்வுக்காலத்துக்கு என வாழ்க்கையின் எந்தவொரு முக்கியமான இலக்குகளுக்கும் முதலீடுகளைத் தொடங்க முடியாமல் கடன் சுமையில் தவிப்பவர்கள் ஏராளம். இப்படிச் சிக்கலில் சிக்கித் தவிக்கும்போதுதான் இந்தச் சிக்கலிலிருந்து விடுபட என்ன வழி என நாம் தேடுகிறோம். 
மாதந்தோறும் செலுத்தும், கடன் தவணைகள் (EMI) இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நாம் அனைவரும் ஏதோ ஒருவிதமான கடனுக்கு கடமைப்பட்டவர்களாகவே இருக்கிறோம். கார் கடன், தனிநபர் கடன், நகைக் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற ஏதாவது ஒரு கடன் தவணையைக் கட்டி கொண்டுதான் இருக்கிறோம். பலர் ஒரே நேரத்தில் பல கடன் தவணைகளை கட்டிக் கொண்டிருப்பார்கள். கடன் தவணைகள் இல்லாத வாழ்க்கை சாத்தியமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
கடன் தவணை இல்லாத வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா என்றால், நிச்சயம் முடியும். இந்தக் கனவை, நனவாக்குவது எப்படி எனப் பார்ப்போம். உலகப் புகழ் பெற்ற முதலீட்டு விஞ்ஞான இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் நிரூபிக்கப்பட்ட ஸ்னோபால் (snowball) வழிமுறையின் மூலம் இதைச் செயல்படுத்தலாம்.
கடன் பனிப்பந்து என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். இது பெரும்பாலும் நிறைய மக்கள் நம்பும் விஷயத்துக்கு எதிரானது. கடனை விட்டு வெளியேற முதலில் அதிக வட்டி விகிதத்துடன் உள்ள பெரிய கடனை முதலில் செலுத்த வேண்டும் / முடிக்க வேண்டும் என்று பலர் நம்புவதற்கு முரணாக இருக்கிறது.
நீங்கள் முதலில் சிறிய கடனைச் செலுத்த தொடங்கும்போதே, உங்களால் உங்களது கடன் பனிப்பந்திற்கு ஓர் உந்துவேகத்தை உருவாக்க முடியும். ஆனால், இந்த நிலை அதிக வட்டியுடன் உள்ள கடனைத்தான் முதலில் செலுத்த வேண்டும், அதன்மூலம்தான் பணத்தைச் சேமிக்க முடியும் என்ற நமது எண்ணத்திற்கும் நம் பாரம்பர்ய ஞானத்திற்கு எதிரானது. உங்களின் எண்ணம் உண்மையாகக்கூட இருக்கலாம்.
ஆனால், நீங்கள் மிகப்பெரிய கடனைக் கட்ட ஆரம்பித்தால், நீங்கள் உங்கள் கணிசமான முனைப்பு மற்றும் உங்கள் உந்துசக்தியை இழக்கக்கூடாது என நினைக்கலாம்; அல்லது  முழுத்தொகைக்குச் செலுத்த நெருங்கும்முன்பே அதனை விட்டுவிட்டுச் செல்லும் நிலையும் ஏற்படலாம். எனவே, உங்களுடைய கடன்களை முழுமையாகச் செலுத்தும்வரை நீங்களே உங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது மிகவும் தேவையான ஒன்று.

* பின்பற்ற வேண்டியவை
கீழே குறிப்பிடப்பட்டிருப்பது, நீங்கள் படிப்படியாகத் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய செயல்முறையாகும்.
1. உங்களின் கடன்களை மிகச் சிறியது முதல் பெரியது வரை முதலில் பட்டியலிடுங்கள்.
2. மிகக் குறைவான கடன் தொகையைத் தவிர்த்து, பாக்கி அனைத்துக் கடன் தொகை களுக்கும் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்திவிடவும்.
3. உங்களின் சிறிய கடன் பட்டியலைப் பார்த்து அதில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பணத்தையும் செலுத்திவிடவும்.
4. கடன் முழுமையாகக் கொடுக்கப்படும் வரை ஒவ்வொரு கடனையும் செலுத்தவும். 
5. உங்களுக்கு ஏதாவது கூடுதல் பணம் கிடைத்தால், அதனையும் முதலில் மிகக் குறைந்த கடனைச் செலுத்துவதற்கு இதே முறையைப் பயன்படுத்துங்கள்.
உதாரணத்தைக் கவனியுங்கள்
நாம் ஒரு உதாரணத்தை எடுத்துக்கொண்டு, அது எப்படி நமக்கு வேலை செய்கிறது அல்லது உதவுகிறது என்று பார்ப்போம். உங்களிடம் கீழே குறிப்பிட்டுள்ள படி, நான்கு வகையான கடன்கள் உள்ளன என்று வைத்துக் கொள்வோம்.
1) கிரெடிட் கார்டு கடன் ரூ.25,000 –  அதன் வட்டி 18 சதவிகிதத்துடன் மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தவணை தொகை ரூ.1,250 
2). மற்றொரு கிரெடிட் கார்டு கடன் ரூ.50,000 – அதன் வட்டி 24 சதவிகிதத்துடன், மாதாந்திரத் திருப்பிச் செலுத்தும் தவணைத் தொகை ரூ.2,500 
3) கார் கடன் ரூ.3,00,000 – இதன் கெடுகாலம் நான்கு ஆண்டுகள். ஆனால், நான்கு வருட காலத்திற்குள் 9% வட்டி விகிதத்துடன் மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தவணைத் தொகை ரூ.6,750.
4) கல்விக் கடன் ரூ.7,50,000. வட்டி விகிதம் 5%. ஒரு வருடத்திற்கு மாதம் செலுத்த வேண்டிய தவணைத் தொகை ரூ.7,950

செயல்திட்டம்
நீங்கள் மேலே குறிப்பிட்ட நிலுவையிலுள்ள ஒவ்வொரு கடனுக்கும் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். இதில், அத்துடன் கூடுதலாக, முதல் கடனான கிரெடிட் கார்டு கடனைச் செலுத்தி முடிக்க வேண்டும். அதற்கு குறைந்தபட்சத் தொகையாக ரூ.5,000 கூடுதலாகச் சேர்க்க வேண்டும். மாதாந்திரத் தவணைத் தொகை ரூ.1,250 மற்றும் ரூ.5,000 சேர்த்து ரூ.6,250 செலுத்தினால் நீங்கள் நான்கு மாதங்களில் முதல் கடனைச் செலுத்தி முடிக்க முடியும்.
அடுத்து, இரண்டாவது கடனான கிரெடிட் அட்டைக்குக் கவனம் செலுத்தி, அதற்கும் மாதம் ரூ.8,750 செலுத்தலாம் (கூடுதலாகச் செலுத்தும் ரூ.5,000, முதல் கடனுக்கான தவணைத் தொகை ரூ.1,250 மற்றும் இந்தக் கடனுக்கான தவணைத் தொகை 2,500). ஐந்து மாதங்களில் இரண்டாவது கடனைச் செலுத்தி முடித்துவிட முடியும்.
அடுத்து கார் கடனுக்கு நீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ.15,500 (ரூ.8,750 மற்றும் கார் கடனுக்கான மாதாந்திரத் தவணைத் தொகை ரூ.6,750) செலுத்த முடியும். கார் கடன் 15 மாதங்களில் முழுமையாகச் செலுத்தி முடிக்கப்பட்டுவிடும். மூன்று கடன்களை முடித்தபிறகு உங்களுக்கு ஓரளவு நம்பிக்கையும் நிம்மதியும் கிடைத்துவிடும்.
அடுத்து, கல்விக் கடன் மட்டுமே. மாதந்தோறும் ரூ.23,450 செலுத்தினால் (ரூ.15,500 மற்றும் கல்விக் கடனுக்குச் செலுத்தும் மாதாந்திரத் தொகை ரூ.7,950),  நீங்கள் அடுத்த 24 மாதங்களில் கடன்களில் இருந்து விடுபடுவீர்கள்.
முனைப்புடன் கவனம் செலுத்தி, உங்களுடைய மிகச் சிறிய கடன் தொகையில் தொடங்கி, பெரிய தொகையைச் செலுத்தி முடித்துவிட்டீர்கள்.
நீங்கள் ஊக்கம் தேவைப்படும் நபராக இருந்தால், உங்களுக்கு ஸ்னோபால் முறையே சரியான வழிமுறையாக இருக்கும். எல்லாக் கடன்களையும் செலுத்தி முடித்து நிம்மதியாக இருக்க இது உதவும். 

இனி உங்களின் இதர தேவைகளுக்கான செலவுகளை சுலபமாகச் செய்ய முடிவதுடன், எதிர்கால இலக்குகளுக்குத் தேவையான முதலீடுகளையும் மேற்கொள்ள முடியும்.

ப.சரவணன், பேராசிரியர், ஐ.ஐ.எம், திருச்சி

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .