
“அசையாம நல்ல ஸ்டாங்கா இருக்கணும்பா கட்டிடம் “ என்பது தான் இதுவரை நாம் கேட்ட வாசகம். இந்த வாசகத்தை அர்த்தமிழக்கச் செய்யப்போகிறது துபாயில் உருவாக இருக்கும் புதிய கட்டிடம் ஒன்று.
எண்பது மாடியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தின் ஒவ்வோர் மாடியும் நிலையாக இல்லாமல் சுற்றக் கூடிய வகையில் அமையப் போகிறதாம்.
இந்த சிந்தனையின் பின்னால் இருக்கும் ரொட்டேட்டிங் டவர் டெக்னாலஜி கம்பெனியின் நிறுவனர் டேவிட் ஃபிஷர் , வாழ்க்கையே நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கிறது, கட்டிடம் மட்டும் நிலையாய் இருப்பது ஏன் என தத்துவக் கிச்சுக் கிச்சையும் மூட்டுகிறார்.
வலிமையான காங்கிரீட் மையத்திலிருந்து இந்த மாடிகள் சுழலுமாம். ஒரு மாடியை நீங்கள் வாங்கினால் அந்த மாடியை உங்கள் விருப்பம் போல அசைத்துக் கொள்ளலாமாம்.

வெயில் முகத்தில் அடிக்கிறது என்றால் மாடியை கொஞ்சம் அந்தப் பக்கமாகத் திருப்பிக் கொள்ளலாம். ஏதோ சத்தம் கேட்கிறதே என்று நாம் ஓடத் தேவையில்லை, வீட்டை கொஞ்சம் சுற்றவிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த கட்டிடத்துக்குத் தேவையான முழு மின் தேவையையும் அந்தக் கட்டிடமே சூரிய ஒளியிலிருந்து தயாரித்துக் கொள்ளும் வகையில் இந்த கட்டிடம் தயாராகப் போகிறது என்பது சுவாரஸ்யச் செய்தி.
நீச்சல் குளம், தோட்டம் என வசதிகள் இருப்பதுடன் காரையும் தங்கள் மாடிக்குப் பக்கத்திலேயே கொண்டு பார்க் செய்யவும் வசதி செய்யப்படுமாம்.
ஆனால், வீட்டுக்குத் தேவையான தண்ணீர் பைப் களை எப்படி மாட்டுவது என்பதில் தான் பெரிய சிக்கலே இருக்கிறதாம். ஆனாலும் அதற்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன என்கிறார்கள்.
355 மில்லியன் பவுண்ட் செலவில் இந்தக் கட்டிடம் கட்டப்பட இருக்கிறதாம். அமெரிக்காவின் 9/11 புகழ் இரட்டைக் கோபுர தலைமைப் பொறியாளர் லெஸ்லி ராபட்சன் தான் இந்த திட்டத்தின் தொழில்நுட்ப வழிகாட்டியாம்.
கட்டிடம் எல்லா பெரிய கட்டிடங்களையும் போல பாதுகாப்பாய் இருக்கும் ! கவலையே வேண்டாம் என்கிறார் டேவிட் ஃபிஷர். வாங்க விருப்பமுடையோர் அணுகலாமாம். !
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .