Saturday, July 23, 2011

அபாய டிராகன்




பெர்முடா முக்கோணம்... இந்தப் பெயரை நாளிதழ்கள், ஆராய்ச்சிக் கட்டுரை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு பரிட்சயமான ஒரு செய்திதான். றுதரியாதவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். இந்த அபாயகரமான முக்கோணம் அமைந்திருக்கும் இடம் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு கிழக்குப் பகுதிக்கு அப்பால் கரீபியன் தீவுக்கு அருகில் உள்ள கடல் பரப்பு. இந்தக் கடற்பரப்பில் செல்லும் கப்பல்கள், பரப்பின் மேல் பரக்கும் விமானங்கள் திடீர் திடீரென்று காணாமல் போய்விடும். இதுதான் இந்த பெர்முடா முக்கோணத்தின் செய்தி. இதுவரை இந்த மர்மத்திற்கு விடை கிடைக்கவில்லை.

ஆராய்ச்சியாளர்களின் விடைதெரியாத கேள்விகளுள் இதுவும் ஒன்று என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புதிய செய்தி. இதேபோல கடற்பரப்பு, பிலிப்பைன்ஸ் கடற்பகுதியிலும் இருக்கிறது. அதாவது ஜப்பானின் மேற்கு கடற்பகுதி, டோக்கியோவின் வடக்கு கடற் எல்லைப் பகுதி. இன்னும் தெளிவாக சொல்வதென்றால், சீனா மற்றும் கிழக்கு ஜப்பான் கடற்பரப்பு, தாய்வான் போன்ற பகுதிகளை இணைக்கும் கடற்பகுதி அது.பெரும் திகிலும், மர்மமும் அந்தக் கடற்பரப்பு முழுவதும் விரிந்து கிடக்கிறது.
இப்படி ஒரு அமானுஷ்யமான, ஆபத்தான கடற்பகுதி தங்கள் கடற்பரப்பில் இருக்கிறது என்று தைரியமாக செய்தி வெளியிட்டது ஜப்பான். அது, 1950ஆம் ஆண்டு, ஜப்பான் கப்பற்படையைச் சேர்ந்த கப்பல் ஒன்று,சிற்சில வீரர்களோடு கடல் எல்லைப் பாதுகாப்பிற்காக பயணித்துக்கொண்டிருந்தது. கப்பலின் ரேடார் தொடர்பு, கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து வந்துகொண்டுதான் இருந்தது. ஆனால்,கப்பல் ஜப்பானின் கிழக்கு கடற்பகுதி எல்லையும், பிலிப்பைன்ஸ் கடற் எல்லையும் தொடும் இடத்திற்கு சென்ற ஒரு சில நிமிஷத்திற்குள் சட்டென்று தொடர்பு முற்றிலும் அறுந்துபோனது. எந்த ஒரு சமிக்ஞைகளும் அந்த கப்பலில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கவில்லை.

ஒன்றும் பிடிபடவில்லை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகளுக்கு, எதிரி நாட்டு கப்பல்களோ, அண்டை நாட்டுக் கப்பல்கள் வந்ததற்கான எந்த ஒரு சமிக்ஞைகளும் கிடைக்காதபட்சத்தில், இந்தக் கப்பலின் தொடர்பு துண்டித்துப்போனது எதனால், என்று குழம்பிப்போய் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான, ஹெலிகாப்டர், படகுகளும் தேடுதலுக்கு உடனடியாக முடுக்கப்பட்டன. சல்லடைப்போட்டுத் தேடியும் கிடைக்கவில்லை, அந்த பாதுகாப்பு கப்பல்.

அதற்குப் பிறகுதான், 1950ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் இந்தக் கடற்பகுதி முற்றிலும் அபாயகரமானது. இந்தக் கடற்பரப்பில் எவரும் பயணம் செய்யவேண்டாம் என்ற எச்சரிக்கை அறிவிப்பை ஜப்பான் அரசு பகிரங்கமாய் வெளியிட்டது. அந்த இடத்திற்குப் பெயர் டிராகன் முக்கோணம் என்றும் ஜப்பான் அறிவித்தது.

கடற்பரப்பின் ஆழ்பகுதியில் டிராகன் உறங்கிக்கொண்டிருக்குமாம். கடற்பரப்பின் மேற்பகுதியல் செல்லும் கப்பலின் அதிர்வு சத்தம், டிராகனின் தூக்கத்தை கலைத்து விடுமாம். இதனால், ஆத்திரம் கொள்ளும் டிராகன் ஆவேசமாய் எழுந்திருக்குமாம், அப்போது கடல் அலைகள் பெரிய அளவில் ஆர்ப்பரிக்குமாம், பெரிய சூராவளிக் காற்று அப்பகுதியில் வீசி, அப்பகுதியில் வரும் கப்பலை காவு வாங்குமாம் என்று சூபி கதைகளைப்போல் டிராகன் முக்கோணமும் ஜப்பான் வாசிகளுக்கு கதைப்பொருள் ஆனது.
காணாமல் போன கப்பல்கள் குறித்த தேடுதல்கள் ஒருபுறம் இருக்க, செய்திகளில் வராமல் பல கப்பல்கள் காணாமல் போய்க்கொண்டுதான் இருந்தன. இந்நிலையில் 1989ஆம் ஆண்டு சார்லஸ் பெர்லிட்ஸ் எனும் எழுத்தாளர் தி டிராகன் டிரை ஆங்கிள் என்னும் புத்தகத்தை வெளியிட்டார். அந்த வருடத்தில் ஜப்பானில் அதிகப்படியாய் விற்பனையானது இந்தப் புத்தகம்தான். டிராகன் முக்கோணத்தில் இருக்கும் அமானுஷ்யம்தான் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்திலேயே அனைத்துப் புத்தகங்களும் விற்றுத் தீர்ந்துபோயின. அதில் சார்லஸ் முக்கியமாய் குறிப்பிட்டது மூன்று விஷயங்கள். பெர்முடா முக்கோணத்தைப்போல, டிராகன் முக்கோணமும் சர்ச்சைக்குரிய பகுதிதான்.
1950ஆம் ஆண்டு ஜப்பான் அரசின் பாதுகாப்புப் படை கப்பல் காணாமல் போன செய்தியோடு, 1952 ஆம் ஆண்டு வாக்கில், ஜப்பானின் பாதுகாப்புப் படையில் உள்ள ஐந்து கப்பல்கள் இதே பகுதியில் காணாமல் போயிருக்கிறது. இந்தக் கப்பல்களில் இருந்த 700 பேரின் கதி என்ன என்பது குறித்து ஜப்பான் அரசு விளக்கம் கொடுக்கவில்லை என்பது குறித்து அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ஜப்பான் அரசு ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தியது. கடலுக்கடியில் இருக்கும் எரிமலைகள் திடீர் திடீரென்று வெடிப்பதாலேயே கப்பல்கள் விபத்துக்குள்ளாகி காணாமல் போகின்றன என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால், அதுவும் உண்மையில்லை என்பதும் காலப்போக்கில் வந்த ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தின. டிராகன் முக்கோண ஆராய்ச்சிகளுக்காக ஜப்பான் அரசு கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து வருகிறது. ஆனால், இன்னும் ஆராய்ச்சிகள்தான் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் வந்த ஒரு செய்தி, கடல் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஜப்பான் மாணவர்களுக்கு, டிராகன் முக்கோணம்தான் முக்கிய கருப்பொருள். அத்துடன் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் வேண்டிய செலவினங்களை ஜப்பான் அரசே மேற்கொண்டு வருகிறது.

ஆனால், இதற்கிடையில் 1972ஆம் ஆண்டு லண்டனில் இருந்து வெளிவரும் சாகா என்று ஒரு இதழ். இந்த இதழில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஐவான் டி. சான்டர்சன் என்ற ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு கட்டுரையை எழுதுகிறார். விடைதெரியாத கேள்விகளை ஆராய்ச்சிசெய்வதில் வல்லவர் சான்டர்சன். இவர் கடற்பரப்பில் செல்லும் கப்பல், விமானங்கள் திடீர் திடீரென்று காணாமல் போவது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சியின் முடிவில் உலக கடற்பரப்பில் சில பகுதிகளில் மட்டும் எலக்ட்ரோ மேக்னட்டிக் திறன் அதிகளவில் இருக்கிறது. இதனால், அந்தப் பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் தங்கள் கட்டுப்பாட்டை முழுவதும் இழந்து, விபத்துக்குள்ளாகிறது என்று அவர் ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். ஆனால், இது உண்மையா என்ற ஆராய்ச்சியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அதோடு அவர் விட்டுவிடவில்லை. பெர்முடா முக்கோணம், டிராகன் முக்கோணம் போன்று உலகம் முழுவதும் கடற்பரப்பில் 12 இடங்கள் இருக்கின்றன. நம்மை மிரட்டிக்கொண்டிருப்பவை பெர்முடா முக்கோணமும், டிராகன் முக்கோணமும் மட்டும்தான். மீதியுள்ள திகில் கடற்பகுதிகள் எப்போதுவேண்டுமானாலும் நம் தூக்கத்தைக் கெடுக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .