ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தக் காலத்திற்குத் தேவையான மாற்றங்களை உருவாக்க மனிதருள் மாணிக்கங்கள் தோன்றினார்கள். மத தத்துவங்களால் மனித மனங்களை புனிதப்படுத்தினார்கள் மகான்கள். மனித சமுதாய தேவைகளை கண்டுபிடிப்புகளின் வழியே நிறைவேற்றி முன்னேற்றம் ஏற்பட செய்தனர் விஞ்ஞானிகள். அரசியல் தொண்டறம் புரிந்து மாற்றங்களை உருவாக்கினார்கள் சீர்திருத்தவாதிகள். இவர்களின் போதனைகள், கண்டுபிடிப்புகள், கொள்கைகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஊடுருவி நிற்பதால் அவர்கள் என்றும் மறக்கக்கூடாதவர்களாகிறார்கள்.
***
மகான்கள், விஞ்ஞானிகள், சீர்திருத்தவாதிகள் போன்றவர்களால்தான் மனித சமுதாயம் இன்றைய நவ நாகரீகத்துக்கு வளர்ந்திருக்கிறது. இவர்களில் யார் சிறந்தவர்கள் என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்துவிடுவதுண்டு. ஆன்மிகம்தான் சிறந்தது என்றும், அறிவியல் இல்லாவிட்டால் மாற்றங்களே வந்திருக்காது என்றும் முடிவில்லாத விவாதம் நடத்திக் கொண்டே போகலாம். ஆராயத் தொடங்கினால் ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் குறைத்து மதிப்பிட முடியாத வகையில் இருக்கிறது. எனவே யார் சிறந்தவர்கள் என்பதைவிட இவர்கள் அனைவரும் சிறப்புக்குரியவர்கள், வணங்கப்படத் தக்கவர்கள் என்பதே சரி.
***
புவிஈர்ப்பு விசையை கண்டறிந்து மக்களுக்கு அறிவியலின்பால் ஈர்ப்பு உண்டாகச் செய்தவர் ஐசக் நியூட்டன் (1642 – 1727). இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் நாளில் பிறந்தவர். மத எதிர்ப்புகளுக்கு அஞ்சி பல கண்டுபிடிப்புகளை வெளியிட தயங்கியவர். பலதுறை நுண்ணறிவு கொண்டவர். இவரது ஒளி இயல்பு ஆராய்ச்சி(1668)யில் உருவாக்கிய `பிரதிபலிப்பு தொலைநோக்கி’யின் நவீன வடிவங்களே இன்றைய வானியல் தொலைநோக்கிகள். ஒளி விதிகள், பொருள் இயக்க விதிகள் (ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்வினை உண்டு), கணிதவியலில் `இன்டகரல் கால்குலஸ்’ போன்றவை ஐசக் நியூட்டனை என்றும் அழியாப்புகழ் மிக்கவராக நிலைக்கச் செய்யும் கண்டுபிடிப்புகளாகும்.
***
பவுத்த சமயத்தை நிறுவிய புத்தர் (கி.மு.563 – 483), மகான்களில் ஒருவர். நேபாளத்தில் அரச வம்சத்தில் சித்தார்த்தராக பிறந்தவர் திருமணத்திற்குப்பின் துறவுக்கு வந்தார். தியானத்தில் ஆழ்ந்தபோது வாழ்வியல் பிரச்சினைகளுக்கு ஆசையே காரணம் என அறிந்தார். ஆசையை வெல்ல 4 போதனைகளை உருவாக்கினார். வாழ்க்கை துயருடையது, துயருக்கு தன்னலமும், ஆசையும் காரணம். ஆசை அடங்கிய நிலை நிர்வாணம், அதை அடைய 8 வழிகள் உண்டு என்பதே அவரது போதனை. நற்காட்சி, நல்லெண்ணம், நல்வார்த்தை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நல்லன கடைபிடித்தல், நல்லோர் உறவு ஆகியவை அந்த 8 வழிகள்.
***
ஜெர்மனியின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879 – 1955) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி. சார்பியல் கொள்கையை அளித்தவர். அவரது ணி=னீநீ2 கோட்பாடு விஞ்ஞான உலகை புரட்டிப்போட்டது. அணுஆற்றல் உள்ளிட்ட பல முக்கிய பயன்பாடுகளுக்கு இக்கொள்கை உதவுகிறது. அவரது பொதுச்சார்புக் கொள்கை தனிப்புகழ் பெற்றது. ஒளிமின் விளைவை விளக்கி கூறியதற்காக நோபல் பரிசு வென்றவர். ஹிட்லரின் எதிர்ப்பால் யூதரான இவர் ஜெர்மனை துறந்து அமெரிக்க பிரஜையானார். மனிதர்களில் அதிகப்படியாக மூளையை உபயோகித்தவர் என்று பாராட்டப்படுபவர். இவரது மூளை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
***
அறிவியல் சார்ந்த சமதர்ம கொள்கை (மார்க்சியம்) வகுத்தவர் காரல்மார்க்ஸ். 1818-ல் ஜெர்மனியில் பிறந்தார். வறுமையில் வாழ்ந்த இவர் `வறுமையின் வரலாறு’ என்னும் முதல்நூலை வெளியிட்டு புகழ் பெற்றார். பொருளாதார மேதையான இவர் 1867-ல் டாஸ்காபிட்டல் (மூலதனம்) என்னும் நூலை வெளியிட்டார். இதன் அடுத்த 2 பாகங்களை தொகுத்து வந்தபோதே 1883-ல் உயிரிழந்தார். இந்நூல்கள் பொதுவுடைமை சித்தாந்த வேதமாக புகழப்படுகிறது. பணி முடியாத மார்க்சின் நூல்களை தொகுத்து பதிப்பித்தவர் அவரது நண்பரான அரசியல் அறிஞர் எங்கெல்ஸ். இவரது பங்களிப்பு மூலதனத்தில் முக்கியமானது என்றாலும் மார்க்சின் பங்கு பிரதானமானது.
***
அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த வர்ஜீனியாவில் பிறந்தவர் வாஷிங்டன் (1732-1799). போர்வீரரான இவர் 5 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். பின் பதவி விலகி வணிகரானார். 1775-ல் இரண்டாவது அமெரிக்க புரட்சி ராணுவத்தின் தலைமைப் பொறுப்பேற்றார். போரில் வெற்றி பெற்று சுதந்திர அமெரிக்காவை மலரச் செய்தார். அப்பெருமையால் முதல் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று 2 முறை அப்பதவியில் நீடித்தார். அவரது ராணுவ அனுபவம், நிர்வாகத்திறமை அவரை அப்பதவிக்கு தகுதியுடையவராக்கியது. அவரது பல திட்டங்கள் அமெரிக்காவில் மக்களாட்சி நிலைபெறவும், வல்லரசாக திகழவும் அடிகோலி நிற்கின்றன.
***
இன்றைய நவீன உலகில் எந்த தொழில்நுட்பமும் மின்சாரமின்றி இயங்காது. அந்த அற்புத மின்சாரத்தை காந்தசக்தி மூலம் உருவாக்கும் வழியை கண்டுபிடித்து தந்தவர்தான் மைக்கேல் பாரடே. இங்கிலாந்தில் 1791-ல் பிறந்தவர். 1821-ல் மின்மோட்டாரின் அடிப்படை இயக்கத்தை அறிந்து விளக்கியதால் மோட்டார்களின் தந்தையாக திகழ்ந்தார். சில வேதியல் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி உள்ளார். மின்பகுப்பாய்வு இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானது. காந்தப்புல ஆய்வால் நவீனயுகத்தின் பல முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ள பாரடேவின் புகழ் பாருள்ளவரை நிலைக்கும்.
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .