Monday, February 11, 2019

அநியாய ஆடம்பரம்!


தன்னை `சூரியக் கடவுள்’ என்று அழைத்துக் கொண்ட பிரெஞ்சு மன்னன் பதினான்காம் லூயி வீண் ஆடம்பரத்துக்காகக் கட்டியதுதான் வெர்செய்ல்ஸ் அரண்மனை. நாட்டையே திவாலாக்கிய இதைக் கட்டி முடிக்க 50 ஆண்டுகள் ஆயின. முப்பதாயிரம் பேர் வலுக்கட்டாயமாக கூலியில்லாமல் வேலை செய்ய வைக்கப்பட்டனர். பணியின்போது நூற்றுக்கணக்கான பேர் கொள்ளை நோயால் உயிரிழந்தனர்.
கட்டுமானப் பணிகளை மன்னன் நேரடியாக மேற்பார்வையிட்டான். சலவைக் கல், வெண்கலச் சிலைகள் பல நிறுவப்பட்டன. 250 ஏக்கர் பரப்பில் தோட்டம் அமைக்கப்பட்டது.
ஏராளமான நீரூற்றுகள் அமைக்கப்பட்டன. பல வகையான விலங்குகளும், பறவைகளும் கொண்ட காட்சி சாலையும் ஏற்படுத்தப்பட்டது. அரண்மனையை ஒட்டி ஒரு மைல் நீளமும், 200 அடி அகலமும் உடைய கால்வாய் வெட்டப்பட்டது. அதில் படகுகள் விடப்பட்டன.

1682-ல் மன்னர் தனது பரிவாரங்களுடன் இங்கு குடியேறினார். 1789-ம் ஆண்டு வரை வெர்செய்ல்ஸ், பிரான்சு நாட்டின் தலைநகராக இருந்தது. அரசனின் பரிவாரம், 9 ஆயிரம் வீரர்கள் உட்பட 20 ஆயிரம் பேரைக் கொண்டதாக இருந்தது. அரண்மனையில் ஆயிரம் பிரபுக்களும், 4 ஆயிரம் பணியாளர்களும் வசித்தனர். அது ஆடம்பர மாளிகையாக இருந்ததே தவிர, அடிப்படை வசதிகள் இல்லை. இந்த அரண்மனையின் கோலாகல வாழ்க்கைக்கு 1789-ல் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி முடிவு கட்டியது. தற்போது இது அருங்காட்சியமாக உள்ளது.

மனிதருள் மாணிக்கங்கள்

வ்வொரு காலகட்டத்திலும் அந்தக் காலத்திற்குத் தேவையான மாற்றங்களை உருவாக்க மனிதருள் மாணிக்கங்கள் தோன்றினார்கள். மத தத்துவங்களால் மனித மனங்களை புனிதப்படுத்தினார்கள் மகான்கள். மனித சமுதாய தேவைகளை கண்டுபிடிப்புகளின் வழியே நிறைவேற்றி முன்னேற்றம் ஏற்பட செய்தனர் விஞ்ஞானிகள். அரசியல் தொண்டறம் புரிந்து மாற்றங்களை உருவாக்கினார்கள் சீர்திருத்தவாதிகள். இவர்களின் போதனைகள், கண்டுபிடிப்புகள், கொள்கைகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஊடுருவி நிற்பதால் அவர்கள் என்றும் மறக்கக்கூடாதவர்களாகிறார்கள்.
***
கான்கள், விஞ்ஞானிகள், சீர்திருத்தவாதிகள் போன்றவர்களால்தான் மனித சமுதாயம் இன்றைய நவ நாகரீகத்துக்கு வளர்ந்திருக்கிறது. இவர்களில் யார் சிறந்தவர்கள் என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்துவிடுவதுண்டு. ஆன்மிகம்தான் சிறந்தது என்றும், அறிவியல் இல்லாவிட்டால் மாற்றங்களே வந்திருக்காது என்றும் முடிவில்லாத விவாதம் நடத்திக் கொண்டே போகலாம். ஆராயத் தொடங்கினால் ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் குறைத்து மதிப்பிட முடியாத வகையில் இருக்கிறது. எனவே யார் சிறந்தவர்கள் என்பதைவிட இவர்கள் அனைவரும் சிறப்புக்குரியவர்கள், வணங்கப்படத் தக்கவர்கள் என்பதே சரி.
***
புவிஈர்ப்பு விசையை கண்டறிந்து மக்களுக்கு அறிவியலின்பால் ஈர்ப்பு உண்டாகச் செய்தவர் ஐசக் நியூட்டன் (1642 – 1727). இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் நாளில் பிறந்தவர். மத எதிர்ப்புகளுக்கு அஞ்சி பல கண்டுபிடிப்புகளை வெளியிட தயங்கியவர். பலதுறை நுண்ணறிவு கொண்டவர். இவரது ஒளி இயல்பு ஆராய்ச்சி(1668)யில் உருவாக்கிய `பிரதிபலிப்பு தொலைநோக்கி’யின் நவீன வடிவங்களே இன்றைய வானியல் தொலைநோக்கிகள். ஒளி விதிகள், பொருள் இயக்க விதிகள் (ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்வினை உண்டு), கணிதவியலில் `இன்டகரல் கால்குலஸ்’ போன்றவை ஐசக் நியூட்டனை என்றும் அழியாப்புகழ் மிக்கவராக நிலைக்கச் செய்யும் கண்டுபிடிப்புகளாகும்.

***
பவுத்த சமயத்தை நிறுவிய புத்தர் (கி.மு.563 – 483), மகான்களில் ஒருவர். நேபாளத்தில் அரச வம்சத்தில் சித்தார்த்தராக பிறந்தவர் திருமணத்திற்குப்பின் துறவுக்கு வந்தார். தியானத்தில் ஆழ்ந்தபோது வாழ்வியல் பிரச்சினைகளுக்கு ஆசையே காரணம் என அறிந்தார். ஆசையை வெல்ல 4 போதனைகளை உருவாக்கினார். வாழ்க்கை துயருடையது, துயருக்கு தன்னலமும், ஆசையும் காரணம். ஆசை அடங்கிய நிலை நிர்வாணம், அதை அடைய 8 வழிகள் உண்டு என்பதே அவரது போதனை. நற்காட்சி, நல்லெண்ணம், நல்வார்த்தை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நல்லன கடைபிடித்தல், நல்லோர் உறவு ஆகியவை அந்த 8 வழிகள்.

***
ஜெர்மனியின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879 – 1955) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி. சார்பியல் கொள்கையை அளித்தவர். அவரது ணி=னீநீ2 கோட்பாடு விஞ்ஞான உலகை புரட்டிப்போட்டது. அணுஆற்றல் உள்ளிட்ட பல முக்கிய பயன்பாடுகளுக்கு இக்கொள்கை உதவுகிறது. அவரது பொதுச்சார்புக் கொள்கை தனிப்புகழ் பெற்றது. ஒளிமின் விளைவை விளக்கி கூறியதற்காக நோபல் பரிசு வென்றவர். ஹிட்லரின் எதிர்ப்பால் யூதரான இவர் ஜெர்மனை துறந்து அமெரிக்க பிரஜையானார். மனிதர்களில் அதிகப்படியாக மூளையை உபயோகித்தவர் என்று பாராட்டப்படுபவர். இவரது மூளை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

***
அறிவியல் சார்ந்த சமதர்ம கொள்கை (மார்க்சியம்) வகுத்தவர் காரல்மார்க்ஸ். 1818-ல் ஜெர்மனியில் பிறந்தார். வறுமையில் வாழ்ந்த இவர் `வறுமையின் வரலாறு’ என்னும் முதல்நூலை வெளியிட்டு புகழ் பெற்றார். பொருளாதார மேதையான இவர் 1867-ல் டாஸ்காபிட்டல் (மூலதனம்) என்னும் நூலை வெளியிட்டார். இதன் அடுத்த 2 பாகங்களை தொகுத்து வந்தபோதே 1883-ல் உயிரிழந்தார். இந்நூல்கள் பொதுவுடைமை சித்தாந்த வேதமாக புகழப்படுகிறது. பணி முடியாத மார்க்சின் நூல்களை தொகுத்து பதிப்பித்தவர் அவரது நண்பரான அரசியல் அறிஞர் எங்கெல்ஸ். இவரது பங்களிப்பு மூலதனத்தில் முக்கியமானது என்றாலும் மார்க்சின் பங்கு பிரதானமானது.

***
அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த வர்ஜீனியாவில் பிறந்தவர் வாஷிங்டன் (1732-1799). போர்வீரரான இவர் 5 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். பின் பதவி விலகி வணிகரானார். 1775-ல் இரண்டாவது அமெரிக்க புரட்சி ராணுவத்தின் தலைமைப் பொறுப்பேற்றார். போரில் வெற்றி பெற்று சுதந்திர அமெரிக்காவை மலரச் செய்தார். அப்பெருமையால் முதல் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று 2 முறை அப்பதவியில் நீடித்தார். அவரது ராணுவ அனுபவம், நிர்வாகத்திறமை அவரை அப்பதவிக்கு தகுதியுடையவராக்கியது. அவரது பல திட்டங்கள் அமெரிக்காவில் மக்களாட்சி நிலைபெறவும், வல்லரசாக திகழவும் அடிகோலி நிற்கின்றன.

***


ன்றைய நவீன உலகில் எந்த தொழில்நுட்பமும் மின்சாரமின்றி இயங்காது. அந்த அற்புத மின்சாரத்தை காந்தசக்தி மூலம் உருவாக்கும் வழியை கண்டுபிடித்து தந்தவர்தான் மைக்கேல் பாரடே. இங்கிலாந்தில் 1791-ல் பிறந்தவர். 1821-ல் மின்மோட்டாரின் அடிப்படை இயக்கத்தை அறிந்து விளக்கியதால் மோட்டார்களின் தந்தையாக திகழ்ந்தார். சில வேதியல் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி உள்ளார். மின்பகுப்பாய்வு இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானது. காந்தப்புல ஆய்வால் நவீனயுகத்தின் பல முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ள பாரடேவின் புகழ் பாருள்ளவரை நிலைக்கும்.

Sunday, February 10, 2019

சாதிக்க விருப்பமா.. அவமானப்படுங்கள்


என்னை நானே யாரென்று 
புரிய எனக்கு தேவைப்படும் 
ஓர் ஆயுதம் தான் அவமானம்! 
இது உண்மை என்பது போல், 

அனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும்.  அவமானங்கள் தான், நம்மை திசைமாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே அந்தஅவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது. வெற்றியாளர்களின் ஆரம்ப கட்ட அடிதளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும். அவர்கள் உயருவதற்கான படிக்கட்டுகளில் இந்த அவமானத்திற்கும், ஓர் இடம் இருந்திருக்கும். 

நம்மை அவமானப் படுத்து வோரை பார்த்து பாதிப்படையக் கூடாது; அவர்களுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். அவமானம் என்பது தோல்வி என எடுத்துக் கொள்ளக் கூடாது. இது இழிவும் அல்ல; ஒரு பாடம். நம் வாழ்க்கையில் வெற்றிகளுக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும், இந்த மாதிரி அவமானங்களுக்கும் இடம் உண்டு. உங்களை உருவாக்குவதில் அந்த அவமானங்களுக்கு இடமில்லை என்று நினைக்காதீர்கள். ஏற்பட்ட அவமானங்களுக்காக குமைந்து கொண்டிருக்காதீர்கள். நம் வாழ்வில் தவறுகள் என்கிற காற்று அடிக்கும்போது, அவமானம் போன்ற புழுதிகள் கிளம்பத் தான் செய்யும். 

நாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு காரியத்தில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்து தான் ஆகவேண்டும். 

நம் மீது குப்பையையும், சாணத்தையும் கொட்டுகின்றனரே என்று, செடி ஒருநாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை; அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. அந்த குப்பையை தனக்கான உயிர்ச்சத்தாக எடுத்துக் கொண்டு, பூக்களை, காய், கனிகளை தருவதில்லையா! நாம் அந்த செடியை போல இருக்க வேண்டாமா? மற்றவர்களின் ஏளனங்களையும், அவமானங்களையும் உரமாக ஏற்று, வெற்றி நோக்கி செல்ல வேண்டாமா?
உங்களுடைய குறைகளை சொல்லி மற்றவர்கள் இன்று அவமதித்தாலும், நாளை உங்கள் வெற்றியை பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்வர்! ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… ‘நம்மை இவ்வளவு அவமானப் படுத்துகின்றனரே…’ என்று மட்டும் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள். சோர்ந்து போகாதீர் 
அப்படி ஒவ்வொரு துறையிலும் அவமானப்பட்டவர்கள் உட்கார்ந்து விட்டால், சமுதாயத்தில் வெற்றியாளர்களே உருவாக முடியாது; இப்போது இருக்கும் வெற்றியாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள். 

எல்லாவற்றிலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என, எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனம், ஒரு அவமானத்தை கண்டு சோர்ந்து போய், அந்த காரியத்திலிருந்து விலகிவிடுவது. 

மனித இனத்தை தவிர, மற்ற ஜீவராசிகள் எதையும் அவமானமாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதன் தான் ஒரு விஷயத்தில் அவமானப்பட்டால் துவள்வதும், அந்த வேலையே வேண்டாமென ஓடிப் போவதை வழக்கப்படுத்திக் கொள்கிறான். 

ஆகவே, அவமானப்படுவது ஒன்றும் பெரிய தப்பில்லை. இப்போது சொன்ன விஷயங்கள் அனைத்துமே, நல்ல விஷயங்களுக்கு மட்டுமே… வேறு மாதிரியான காரியங்களுக்கு, நாங்கள் பொறுப்பல்ல!

பிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்!


இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
அடுத்தூர்வது அது ஒப்ப நில்! 

இந்த குறளுக்கு நமக்கு கண்டிப்பாய் விளக்கம் தெரிந்திருக்கும். நமக்கு துன்பம் வரும் போது சிரிக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; அந்த மகிழ்ச்சியே, அந்த துன்பத்தை தூர காணாமல் போக்கிவிடும். அந்த துன்பத்திற்கு நிகர், அந்த நேர மகிழ்ச்சி தான். 

சமீபத்தில் ஒரு வாழ்வியல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். இதற்கான ஒரு புது விளக்கம், நாம் ஒத்துக் கொள்கிற மாதிரி, வேறு விதமாக கூறப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. 

‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றால், – துன்பம் வரும்போது நகர்ந்து விடுங்கள் என அர்த்தம். 

அதற்காக, ‘துன்பத்தை பார்த்து பயந்து ஓடி விடுங்கள்’ என்று நேர் அர்த்தம் கொள்ளக் கூடாது; அந்த துன்ப மனநிலையிலிருந்து நகர்ந்து, தள்ளி நின்று, அந்த பிரச்னையை – துன்பத்தை கவனியுங்கள்; தீர்வு கிடைக்கும் என்பதாக விளக்கம் கூறினர். 

இது எவ்வளவு தூரத்திற்கு உண்மை,

ஒத்துக் கொள்ளக் கூடியதா என்று சில திருக்குறள் ஆர்வலர்களிடம் கேட்டேன்.’இதுவரை திருக்குறளுக்கு என்று திருவள்ளுவரால் இயற்றப்பட்ட பொழிப்புரை ஒன்று தனியாக கிடையாது. படித்தவர்கள் அவரவர் வசதிக்கேற்ப, புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப இயற்றிய பொழிப்புரை தான் வழக்கத்தில் இருந்து வருகிறது. அதனால், இதையும் ஒரு விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்; தவறொன்றுமில்லை’ எனக் கூறினர். 

‘நகுக’ என்றால் என்ன? 

யோசித்து பார்த்தால், இந்த, ‘நகுக’ என்பதற்கு இப்படி நகர்ந்து போவது என்றே வைத்துக் கொண்டால் கூட நன்றாகத் தான் இருக்கும் என்றே தோணுகிறது. நீங்கள் மிகவும் துன்பத்தில் இருக்கும் போது, ‘அய்யய்யோ… நான் படும் துன்பத்தை சுற்றியே என் சிந்தனை சுழல்கிறதே…’ என்று வெறுப்படைந்து விடாமல், ‘இல்லை! நான் மகிழ்ச்சியோடு தான் இருக்கிறேன்’ என்று நேர்மறையாக சிந்திக்கும் சித்தாந்தத்தின் படி, மாற்றுச் சிந்தனையைத் திணிக்க நீங்கள் முயற்சி செய்தால், மனதுக்குள் ஒரு போராட்டம் தான் உருவாகும். 

அதற்கு பதிலாக உங்களின் சிந்தனையை நீங்களே சற்றுத் தள்ளி நின்று, கவனிக்க ஆரம்பியுங்கள். 

துன்பமான சிந்தனையோ, மகிழ்ச்சியான சிந்தனையோ, சபலமான சிந்தனையோ… 

அதை நீங்களே விலகி நின்று பார்க்கும்போது, 
உங்களுக்குள்ளே, ‘புரிந்து கொள்ளல்’ நடக்கும்.இதுபோன்ற மனநிலை வந்து விட்டால் துன்பம், மகிழ்ச்சி இந்த இரண்டுமே ஒன்று தான்! மகிழ்ச்சி 
எப்படி ஓர் அனுபவமோ, அதே போல் துயரமும் ஓர் அனுபவமே! ஆனால் மனதில் அமைதியும், தெளிவும் இல்லாத மனிதர்களுக்கு, மகிழ்ச்சி கூட சோகமானதாய் போய்விடும். ஆனால் மனதுக்குப் பிடித்து விட்டால், இனிப்பு என்பது எப்படி ஒரு சுவையோ, அதேபோல், கசப்பும் ரசிக்கக் கூடிய ஒரு சுவைதான் என்பதை உணர்ந்து கொண்டால், ‘பிரச்னையா… அய்யோ, இதென்ன எனக்கு மட்டும் இப்படி கசக்கிறதே!’ என்ற புலம்பலோ இருக்காது!: சிறுபிள்ளையாக இருக்கும்போது, இனிப்பு ஒன்று தான் சுவை. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு எல்லாம் சுவை இல்லை என்று, நமக்கு நாமே முடிவெடுத்து, மற்ற சுவைகளுக்கு இடம் தராமல் மூடி விடுகிறோம். 
அது போல, மகிழ்ச்சி மட்டும் தான் நல்ல உணர்ச்சி; மற்றது எல்லாம் வெறுக்கத்தக்க உணர்ச்சிகள் என்று எண்ணி நாம், அனேக உணர்ச்சிகளுக்கு கதவை திறப்பது இல்லை; பயத்துடனேயே அதை எதிர்நோக்காமல் விட்டு விடுகிறோம். 

பிரச்னைகளை விட்டு ஓடவோ, விலகி ஒதுங்கவோ கூடாது. அப்படியே துன்பம் ஏற்பட்டுவிட்டால், கத்தி கூப்பாடு போட்டு அதகளம் பண்ணுவதில் அர்த்தம் இல்லை. ‘இது எனக்கான துன்பம் இல்லை… யாருக்கோ உள்ளது. அவர்களுக்கு வெளியில் ஒரு மூன்றாவது மனிதராய் நான் என்ன தீர்வு சொல்ல இயலும், முடியும்’ என்கிற மாதிரி தள்ளி நின்று யோசித்தாலே அந்த துன்பத்தின் வீரியம் குறைந்து, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடும். 

ஒவ்வொரு நொடியும் நாம் என்ன செய்கிறோம் என்பதற்கான விளைவு தான், நாம் வாழ்க்கையில் சந்திக்கும் இன்பங்களும், துன்பங்களும். வேதனையான சூழ்நிலையில் எதிர்பாராத பாதிப்புகள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகின்றன. ஆனால், எந்த சூழ்நிலையிலும், வாழ்க்கையில் ஓர் அர்த்தம் உள்ளது என்பதை, நாம் கண்டுகொள்ள வேண்டும். 

இருண்ட பக்கங்கள்? 

துன்பம் நம்மை சூழ்ந்துக் கொள்ளும் போது : வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள் முழுமையாக ஆட்கொண்டது போல தோன்றுகிறது. 

துன்பத்தை ஒரு எல்லையில் வைத்து பார்ப்பது கடினம் தான். பழகினால், பழக்கிக் கொண்டால், இதெல்லாம் நமக்கு ஒரு விஷயமா என்று நீங்கள் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள். இப்படி எந்தச் சிறையிலும் அடைபடாமல், தள்ளி நின்று சிந்தனையைக் கவனிக்கும் போது மனம் தானாகவே அமைதி அடையும். திரைகள் விலகும்; உண்மைகள் புரியும். வாழ்க்கை அழகாக, 
அற்புதமானதாக, ஒரு மலரைப் போல மவுனமாக மென்மையாக விரியும். முயற்சித்து தான் பார்ப்போமே, கொஞ்சம் 
நகர்ந்து நின்று!


மனமே… ரிலாக்ஸ்!


வேலை, வேலை, வேலை என்று எப்போதும் சுற்றிக் கொண்டிருக்காமல், இடையிடையே மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வது நல்லது. 

யாரிடம் பேசினால், உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ, அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள், உங்கள் மனதுக்கு தெளிவைத் தரும். 

ஏற்றுக் கொள்ளுங்கள்: இந்த உலகத்தில், ஒருவரே எல்லாவற்றையும், தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட; மலையைத் தலையால் முட்டி உடைக்க முடியாது. ஆனால், சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில், உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

தெளிவாகச் செய்யுங்கள்: எந்த செயல் செய்தாலும், முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக, ஒரு வேலையைச் செய்வதை விட, அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும், செய்யும் வேலையை காதலியுங்கள். ஈடுபாட்டுடன் காட்டிய வேலை, திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும். 

விளையாடுங்கள்: உங்கள் நேர நிர்வாக அட்டவணையில், விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோவிலுக்குச் செல்வதை விட, கால்பந்து விளையாடுவது மேலானது என, விவேகானந்தர் கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் உற்சாகம் தரும். 

பிறரையும் கவனிங்க: உங்கள் விருப்பங்களையும், தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது, மன உளைச்சலில் கொண்டு போய்விடும். நமது விருப்பு, வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், பிரதிபலன் எதிர்பாராமல், தயங்காமல் செய்யுங்கள். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பி வரும்!

சுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும்


நண்பர்கள் என்றால் நல்லா பேசுவர், நம்முடன் நேரம் செலவழிப்பர்; நம்மிடமிருந்து அனைத்தையும் பகிர்ந்து கொள்வர். ஆனால், சிலர் தனக்ெகன்று ஒரு வேலையோ, வாய்ப்போ, வாழ்க்கையோ வந்து விட்டால், மிக சுயநலமாய், அப்படியே கழட்டிவிட்டுவர். சுயநலம் என்பது எவ்வளவு கொடுமை என்பது, அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும். 

இவர்கள், நான் உனக்கு இதைச் செய்தால், நீ எனக்கு அதைச் செய் என, ஒப்பந்தத்தை மனதுக்குள் வைத்து கொள்வர். நீ மட்டும் அதைச் செய்தால், நான் உனக்காக இதைச் செய்துவிடுவேன் என, பதிலுக்கு பதில் செய்யத்தான் கணக்கு போடுவர். நட்புகளுக்கு இடையில் மட்டுமல்ல, சொந்தங்களுக்கு, உறவுகளுக்கு இடையிலும் இப்படி நடந்துக் கொள்வோர் இருப்பர்.பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே, நாம் வாழும் வாழ்வு அர்த்தமானதாக இருக்க வேண்டும். வாழ்ந்தோம் எனும் சொல்லுக்கும், வாழ்வு எனும் சொல்லுக்கும் ஒரு சிறப்பான அர்த்தம் இருக்கிறது. ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், பலருக்கும் அர்த்தமாக, உதாரணமாக வாழ்ந்தோம் என்று, வாழ்வு இருக்க வேண்டும்.

வெற்றியாளர்களின் பின்னணிசுயநலமாய் நடப்போர் கண்கள், அவர்களின் நலம் வரைதான் கண்டுக் கொள்ளும்படி இருக்கும். அதாவது, சில மிருகங்கள் போல, ஒரு குறிப்பிட்ட தூரத்தை மட்டுமே பார்க்க முடியும். இப்படி சுயநலமாய் நடந்துக் கொள்வோர், அந்த நேரத்து வேலையை மட்டுமே கருத்தில் கொள்வர். சில ஆண்டுகளுக்கு பின், என்ன நடக்கும் என்பதை, அவர்களால் அனுமானிக்க முடியாது. இவர்கள் எப்படியென்றால், தன் நன்மையை மட்டும் நினைக்கும் சுயநலம்.இவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும், பணம் படைத்தவர்களாய் இருந்தாலும், ஆன்மிகவாதியாக இருந்தாலும் இவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கும் வாய்ப்பு குறைவுதான். வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர், ஒவ்வொருவர் பின்னணியில் எங்கேயோ அளவற்ற பொதுநலம் இருக்கும். அதற்காக, தன்னலத்தை துறந்தவர்களாய் இருக்கணும் என்று இல்லை. இவர்கள், வாழ்வின் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்று அர்த்தம்.நம்மிடமிருந்தே துவக்கம்சுயநலமாய் இருப்பது, கெட்டதா என்பது தெரியாது. ஆனால், பொதுநலமாய் இருப்பது நல்லது. உலகில் அனைவருமே சுயநலமாய் இருந்துவிட்டால் நாடு எப்படி உருப்படும்? ஆனால், நாம் நம் நிலையை உயர்த்திக் கொள்வதில், சுயநலமாய் இருப்பதில்தான் ஒரு பொதுநலமும் அடங்கியுள்ளது. 

என்னங்க ஒரே குழப்பமாய் இருக்கிறதா? 

ஒழுங்கா, ஒழுக்கமாக சம்பாதிச்சா நம்முடைய வீடு, மனைவி, குழந்தைகள் நன்றாக இருப்பர். நம் ஒழுக்கமும், ஒழுங்கும் நம் வீட்டிலும் பிரதிபலிக்கும். அவங்க படிக்கிற படிப்பும், பார்க்கிற வேலையும் நாட்டுக்கு பயன்படுகிற மாதிரி இருந்தால் போதும். அதுவே, பொதுநலமாக மாறிவிடும். வீடும், ஊரும், நாடும் உருப்படும். அதாவது, நம் சுயநலத்தில், பொதுநலமும் கலந்து 
இருக்கணும்; அப்போ இந்த சுயநலம் தேவைதானே! 
இப்போ புரியுதுங்களா? 

நம் நலத்தை பேணிக்காக்காதவன், எப்படி பொதுநலம் ஆற்றமுடியும்? செயலின் முடிவு பொதுநலமாக இருந்தால் போதும். அதுவே, தன்னலத்தில் பொதுநலம் கருதும் செயலாக அமைந்துவிடும்.ஆனால், அயோக்கியத்தனமான சுயநலம் அமைந்துவிட்டால் என்ன செய்வது? யாரையும் காயப்படுத்தாத, சுரண்டாத சுயநலம் அனைவருக்கும் தேவைதான். இச்சுயநலம், ஒரு வகையில் கடமையும், பொறுப்பும் ஆகும். எந்தச் செயலும், நம்மிடமிருந்தே தான் துவங்க வேண்டும்; ஆனால், செயலின் முடிவு, பொதுநலமாக இருந்தால் போதும்.’மழை பெய்யணும்னு நினைக்கிறது பொதுநலம் நாம் நனையாம குடை பிடிச்சிக்கிறது சுயநலம்’ சிந்தனையில், பொதுநலம் இருந்தாலே போதும். சின்ன சின்ன செயல்கள் நூறு செய்யலாம். பொது இடங்களை சுத்தமாக வைத்து கொள்வதும், பொது இடங்களில் புகை பிடிக்காமல் இருப்பதும், தண்ணீர், மின்சாரத்தை சேமிப்பது என்று துவங்கி, பலவற்றை பட்டியல் போடலாம். பொதுநல சிந்தனையுடன், என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யாமல் இருக்கலாம் என்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஒரு புத்தகமே எழுதியுள்ளார். பொதுநல சிந்தனை மனதில் பூக்க இடமளித்தாலே போதும், உங்கள் அறிவு பொதுநல நோக்கில் 
என்ன செய்யலாம் என்று, வழிக்காட்டத் துவங்கும். 

பொதுநல சிந்தனையோடு… யார் யாரோ கண்டுபிடித்த பொருட்களையும் பயன்படுத்தி வருகிறோம். யார், யாரோ அமைத்து கொடுத்த, அடிப்படை வசதிகளை அனுபவித்து வருகிறோம். ஆனால், அதே சிந்தனையோடு, அடுத்த தலைமுறைக்காகவும், சக மனிதனுக்காகவும், நாம் செயல்பட தயங்குவதென்பது அநியாயம் தானே? 

பெரிய அரசியல் தலைவர்கள், ஞானிகள் போன்றோரால் மட்டும் தான், பொதுநலத்துடன் சிந்திக்க முடியும் என்றும், மற்றபடி சராசரி மனிதர்களுக்கு அதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாகும் எனவும், நம்மில் பலர் நினைக்கிறோம். 

யாருக்கும் எந்த கெடுதல் நினைக்காமலும், செய்யாமலும் என் குடும்பத்தில், எனக்கு இருக்கும் கடமைகளை, எந்தக் குறையும் வைக்காமல் நிறைவேற்றினாலே போதாதா? என்று, ஒரு கேள்வியை கேட்டு, ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளேயே நின்றுக் கொள்கின்றனர். இன்றைக்கும் பொதுநல சிந்தனையோட, ஈர இதயங்கள் ஆங்காங்கே பலர் இருப்பதால்தான், இந்த சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அன்ன தானம். ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம் வரை நடந்துக் கொண்டேயிருக்கிறது. 

நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு? 
நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை நமக்கு… 

மற்றும் நான் ஏன் பிறந்தேன்… இந்த நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்? இந்த முழு பாடல்களின் அர்த்தம் புரிந்தால் போதும்,நாமும் பொதுநலம் பார்த்து நடக்க ஆரம்பித்து விடுவோம்.

குறை கூறினால் கோபம் வருகிறதா?


நாம் எவருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தேவதைகள் அல்லர். ஆனால், ஏனோ நமக்கு மனதின் அடித்தளத்தில் படிந்து விட்ட உணர்வு, நம்மை எவரும் விமர்சிக்கவே கூடாது என்பது. நாம் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்வு மிக  தவறானது. 

‘நீங்க படிக்கட்டுல தடுமாறி விழுந்திங்களே… அதை கவனிச்சேன்; என்னமாய் விழுந்தீங்க தெரியுமா… வேற எவனாச்சும் இப்படி விழுந்திருந்தால், பல்லுப் படுவாயெல்லாம் உடைஞ்சிருக்கும்; எலும்பெல்லாம் முறிஞ்சிருக்கும்…’ என்று படு செயற்கையாக ஒருவர் விழுந்ததைக் கூட பாராட்ட, ‘அப்படியா சொல்றீங்க?’ என்று முகம் பூரித்துப் போகும் முகரக் கட்டைகளும் இருக்கத் தான் செய்கின்றன.

‘படிக்கட்டுன்னா பார்த்து நடக்க வேணாம்; புது இடமில்ல… வீட்டு படிக்கட்டா இது… ரெண்டு கையிலயுமா இப்படி பொருட்களை வச்சுக்கிறது. அந்தப் பையை தோளில மாட்டிக்கிட்டிருந்தா, படிக்கட்டோட நீள, உயரம் தெரிஞ்சுருக்கும்ல…’ என்று எவரேனும் இவரது தவறை சுட்டிக் காட்டினால், ‘யோவ்… (டேய்) உன் வேலையை பாத்துக்கிட்டு போவியா… பெரிசா படிக்கட்டு இறங்குறதுக்கு எனக்கு கத்துக்குடுக்க வந்துட்டே…’ என்று, தவறை சுட்டிக்காட்டியவருக்கே, பதிலடி கொடுக்கவே நம்மில் பலர் தயாராக இருக்கிறோம். 

நம் தவறை பிறர் சுட்டிக்காட்டும் போது, அதை, ‘ஆமா… நீங்க சொன்னது ரொம்ப சரி…’ என்று ஒப்புக் கொள்ள முன் வர வேண்டும். இதன்மூலம், இரு நன்மைகள் நிகழ்கின்றன. 

‘முதலாவது, நம் மனம், நமக்குள் சென்று, ‘இனி பார்த்து நட… அலட்சியத்திற்கும், கவனக்குறைவிற்கும் விலை மிக அதிகம்; பல்லாயிரம் ரூபாய் செலவும், பல மாதப் படுக்கையும் நிகழ்ந்திருக்கும்…’ என்று உணர்த்துகிற போது, அது ஆழ்மனதில் கல்வெட்டாய் பதிகிறது; இது, அடுத்தமுறை படிக்கட்டில் இறங்கும் போது பயன்படும். 

இரண்டாவது, ‘என்னைப் பார்த்து எவனாவது வாயை திறந்தீங்க… அப்புறம் நடக்கிறதே வேற…’ என்கிற எச்சரிக்கை மணியை, எவர் முன்னும் அடிக்காத காரணத்தால், ‘பார்த்துப் போங்க; ஒரே சகதி…’ என்று சொல்ல பலரும் முன் வருவர். 

நான் சொல்வது நடக்கிற பாதைக்கு மட்டுமல்ல… வாழ்க்கை பாதைக்கும் சேர்த்து தான். ஆம்… ‘நல்லது சொன்னால், இவர் கேட்டுக் கொள்வார். பொருட்படுத்திக் காதில் வாங்கிக் கொள்வார்; செயல்படுத்துவார். நம் அக்கறையை சரி வர புரிந்து கொள்கிறவர்…’ என்பன போன்ற நம்பிக்கைகளை மற்றவர்களிடையே உருவாக்கும். 

ஆனால், இவர்களது வாயை, உருட்டல், மிரட்டல்களால் அடைக்கும் போதும், வார்த்தைகளை உதாசீனப்படுத்தும் போதும் என்ன நடக்கும் தெரியுமா? 

நாம் பாதிப்பு அடையும் வரை பார்த்துக் கொண்டிருந்தபின், ‘இந்தாளுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்…’ என்று உள்ளுக்குள் மகிழ்கிற கூட்டம் பெருத்துப் போகும். 

நம் முகத்தில் கழுவாமல் விடப்பட்ட சோப்பு நுரையையே, பிறர் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கும் போது, முதுகின் அழுக்கை யார் தான் சுட்டிக் காட்டுவதாம்? 

நான் ஒருமுறை சிக்னல் ஒன்றில் பச்சை விளக்கிற்காக காத்திருந்த போது பக்கத்தில் ஸ்கூட்டரில் வந்து நின்ற பெண்மணி ஒருவர்,  தன் ஹெல்மெட்டில் இருந்த முன் பிளாஸ்டிக் தடுப்பை உயர்த்தி, ‘நீங்கள் உங்கள் காரின் பின் கதவை சரியாக சாத்தவில்லை…’ என்று சொன்னார். ‘மிக்க நன்றி…’ என, உடனே மகிழ்ச்சி தெரிவித்தேன். ஆனால், நான் கல்லூரி மேடையில் பேசி விட்டுக் கீழே இறங்கிய போது, ‘இன்னும் கூட உங்களிடத்தில் எதிர்பார்த்தேன்…’ என்று ஒரு பேராசிரியை கூறியதும், என் முகம் சுருங்கி விட்டது. 

என் கோணத்தில் அது நல்ல பேச்சாக இருக்கலாம். ஆனால், அது சென்று அடைந்தவர்களை திருப்திப்படுத்தவில்லை என்கிற போது, எங்கே கோளாறு நிகழ்ந்திருக்கிறது என்று நான் பரிசீலித்திருக்க வேண்டும். 

இரு பெண்களும் என் தவறுகளை சுட்டிக்காட்டியவர்களே. ஒன்றில், எனக்கு நன்றி தெரிவிக்க தோன்றியது; மற்றதில் ஏனோ தோற்றுப் போனேன். இவருக்குமல்லவா நான் நன்றி தெரிவித்து, என் குறையை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்; விளக்கம் கேட்டிருக்க வேண்டும். 

அடுத்த கல்லூரிக் கூட்டத்தில் பேச, குறிப்புகளை தயார் செய்த போது, அப்பேராசிரியைக்கு மானசீகமாக நன்றி தெரிவித்து, ஒரு தேர்வை சந்திக்கும் மாணவன் போல், என்னை கருதிக் கொண்டேன். இது பலனளித்தது என்பதை, நான் உங்களிடமாவது ஒப்புக் கொண்டாக வேண்டும்.


மேல் தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை!


செல்வம் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களை பார்த்து, பொறாமைபட தெரிந்த அளவிற்கு, அவர்களது வெற்றி ரகசியங்களை அறிந்து கொள்ளத் தெரியவில்லை நம்மவர்களுக்கு!

‘எவ்வளவு தேறும் இவருக்கு…’ என்று கேட்கத் தெரிந்த அளவிற்கு, ‘இவர்களைப் போல நாமும் வர வேண்டாமா…’ என்று உந்து சக்தியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரிவது இல்லை.

சிலருடைய அபார வளர்ச்சிகளை பார்க்கும்போது, வெற்றியின் காரணங்கள் பிடிபடுவதில்லை. ‘எப்படித்தான் இந்நிலைக்கு வந்தனரோ…’ என்று, நம்மை ரொம்பவே யோசிக்க வைக்கின்றனர்.

‘சிபாரிசுக்கும், பொருளாதார உதவிக்கும், இவர்கள் எந்த அளவுக்கு நமக்கு பயன்படுவர்…’ என்று தான் இவர்களை சுற்றியிருப்போர் கணக்கு போடுகின்றனரே தவிர, எத்தகைய தனித்திறமைகளால், தங்கள் நிலைகளை தக்க வைத்தோ, உயர்த்திக்கொண்டோ செல்கின்றனர் என்கிற ஆராய்ச்சியில், இறங்குவது இல்லை.

நன்கு வளர்ந்தவர்களைப் பொறாமைக் கோணத்துடன் பார்ப்பது வயிற்றில் வைக்கப்படும் நெருப்பை போன்றது. இது வயிறெரியத்தான் பயன்படுமே தவிர, வேறு பயன் இல்லை.

‘என்னோட தான் படிச்சான்; எப்பவும் கடைசி பெஞ்சுல தான் உட்காருவான். இன்னைக்கு என்னடான்னா, எங்கேயோ போயிட்டான். வயிறு பத்திக்கிட்டு எரியுது…’ என்று பள்ளித் தோழர் ஒருவர், காதில் புகை வெளிவரும்படி எட்டி நின்று பேசினால், அவர் இன்னும் கீழே போகப் போகிறார் என்று தான் பொருள்.
மாறாக, நெருப்பை நெஞ்சில் வைத்து, அந்த நெருப்பை, நம் வாழ்க்கை நிலை எனும் வாகனத்தை, முன்னோக்கி தள்ளும் எரிசக்தியாகப் பயன்படுத்த வேண்டும்.

‘வாடா நண்பா… நல்லா வந்துட்டே… உன் கூட படிச்சேன்னு சொல்லிக்கவே பெருமையா இருக்கு. எனக்கும் வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறது, உன்னைப் போல எப்படி முன்னுக்கு வர்றதுன்னு சொல்லித் தரக் கூடாதா…’ என்று அண்டி சென்று கேட்கிற அணுகுமுறை, எத்தனை பேருக்கு இருக்கிறது?

இப்படி கேட்டே விட்டார் ஒருவர்… உடனே, இதை பாராட்டாகவும், பூரிப்பாகவும் எடுத்து கொண்ட பால்ய நண்பர், ‘நல்ல நேரத்தில் வந்தே… கர்நாடகத்துல ஒரு கிளை திறக்கலாம்ன்னு முடிவு செய்து, யாரை போடலாம்ன்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன். நீதான் என், ‘மேனேஜிங் பார்ட்னர்’ ஓ.கே. வா?” என்று கேட்க, திக்கு முக்காடி போனார் நம்மவர்.

இந்தளவிற்கு எல்லாராலும் நிர்வாக பங்குதாரராக முடியாவிட்டாலும், நெருங்கி பழகவாவது இடம் கொடுக்க, இந்த வாய்ப்பை கொண்டே, இவரது வெற்றி சூத்திரங்களை தெரிந்து கொண்டு விடலாம். பின் என்ன… புழுவாக கிடந்தவர்களின் உடலில், புலியின் ரத்தம் ஏறிய கதைதான்.

‘நம்மை பார்த்து பொறாமைப் படும் கூட்டத்தில், இதோ என்னை கதாநாயகன் போல எண்ணி வியக்க ஒருவன் இருக்கிறான்; இவனுக்கு, நம் இதயத்தில் இனி நல்லிடம் தான்…’ என்று வளர்ந்தவர்கள் இடம் கொடுக்க, வியந்து பேசியவர் வாழ்க்கையில், புது அத்தியாயம் ஆரம்பிப்பது உறுதிதான்.

‘அதெல்லாம் முடியாது… இவன் கிட்டப்போய் எவன் நிப்பான்; நான் மானஸ்தன், தன்மானம் கொண்டவன்…’ என்கிற வீராப்பு மனநிலை இருக்குமானால், எட்டி நின்று இவரது வளர்ச்சிகளை வியந்து நோக்கலாம்.
மேல்தட்டு மக்களிடம், நான் பார்த்து வியந்த விஷயங்களை உங்களிடம் கூறுகிறேன்… இவை உங்களுக்கு பயன்படுமானால் மகிழ்ச்சி.

நன்கு வளர்ந்தவர்கள் அனை வருமே வெகு சீக்கிரம் எழுகின்றனர்; நீண்ட நேரம் உழைக்கின்றனர்; எப்போதும் வளர்ச்சி வளர்ச்சி என்று அடங்காமல் வலம் வருகின்றனர். எந்நேரமும், தொழில் சார்ந்த சிந்தனையாகவே இருக்கின்றனர். குறைந்த உழைப்பால், நிறைந்த பலன் கிடைப்பதில் மட்டும் அதிக கவனம் செலுத்துகின்றனர்; மிகக் குறைவாகவே பேசுகின்றனர். வார்த்தைகளை மிக நளினமாக கையாள்கின்றனர். பிடிக்காவிடில், பகைத்து கொள்ளாமல், ஒதுங்கி கொள்கின்றனர். எது ஒன்றையும், மனம் புண்படாதபடி மறுக்கின்றனர்.

மேல்தட்டு மக்களை வியப்பதை பொறுத்த வரை, ஒரே ஒரு நிபந்தனை உண்டு. சிலர், நியாயத்திற்கு புறம்பான வளர்ச்சிகளை அடைந் திருக்கின்றனர் அல்லவா? இவர்களை மட்டும், கரும்புள்ளி வைத்து ஓரங்கட்டி விடுங்கள் போதும்!

அமைதியான நதியில்…!


மனதை ஒரு நிலைப்படுத்தும் போது கிடைக்கும் வெற்றி, அதை அலைபாய விடும் போது தோல்விக்கு வித்திடுகிறது. மனம் குழப்பத்தில் நிறைந்திருக்கும் போது, சிந்தனைகள் தடம் மாறுகின்றன; இது, ஆசை, பேராசை, பொறாமை, தாழ்வு மனப்பான்மை ஏற்பட முக்கிய காரணமாகிறது.
இதிலிருந்து விடுபட, தியானம் செய்வது, முதலிடத்தை பிடிக்கிறது. முறையாக செய்து பார்த்தால், நிச்சயமாக அதன் பலனை அனுபவிக்க முடியும்.
அதிகாலையில், அமைதியான சூழலில், யாரும் தொந்தரவு செய்யாத இடத்தில் கண்களை மூடி, ஏதாவது ஒரு சிந்தனையில், மனதை செலுத்த வேண்டும். இதன் மூலம், உடலும், உள்ளமும் ஆரோக்கியம் பெறும். நாம் எண்ணிக் கொண்டிருக்கும் இலக்கை, சுலபமாக அடைய உதவும்.
தினமும் பயிற்சி செய்ய முடியாதவர்கள், வாரத்தில் ஒருமுறையாவது முயற்சி எடுக்க வேண்டும். வீடு, அலுவலகம், நண்பர்கள், விருந்தினர்கள் மத்தியில் என, எல்லா இடங்களிலும், சுறுசுறுப்பாகவும், இளமையாகவும் காணப்படுவீர்கள்.
எந்தப் பெரிய விஷயத்தையும், எளிதாக எடுத்துக் கொள்ளும் இயல்பு வந்து விடும். சக மனிதர்களிடம் அன்பை பரிமாற வைக்கும். இளைஞர்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம், இளமை தான். இந்த வயதிலிருந்தே கடைபிடிக்க ஆரம்பித்தால், முதுமை வந்த பின்பும் கூட, மனம் மற்றும் உடல் சார்ந்த சிக்கலுக்கு இடமிருக்காது.
இன்றைக்கு நகரவே முடியாத அளவுக்கு பணி இருக்கிறது என்று, ஒதுக்க நினைத்தால், நாளடைவில் தள்ளியே போகும் தியானம். குறிப்பிட்ட வேலைகளை, சரியான நேரத்துக்குள், சிறப்பாக நிறைவேற்றுவதற்கு தியானம் முக்கியமான அம்சமாக கருதப்
படுகிறது. எனவே, ஆரோக்கியமாக வாழ்வதற்கு முடிவெடுத்து விட்டால், இன்றே துவங்குங்கள் தியானம்.

எண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்!

* கவலைப்படுவதால் எந்தக் கவலையும் சரியாகப்போவதில்லை. மாறாக, அது இன்றைய மகிழ்ச்சியைக் காணாமல்போகச் செய்துவிடும். எனவே, நாளையைப் பற்றிய கவலையை நாளை பார்த்துக் கொள்வதென முடிவெடுங்கள்.
‘இன்று மிக மோசமான நாள்’ என்று அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். அந்த நாளின் மோசமான சில நிமிடங்கள், உங்களது மகிழ்ச்சியான நேரத்தை மறைத்துவிட்டதை உணருங்கள். உங்கள் வாழ்க்கையில் இன்னொரு மோசமான நாளே வராது.
எப்போதும் பாசிட்டிவ் மனிதர்கள் பக்கத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள். அவர்களிடம் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஏதோ ஒரு தீர்வு இருக்கும். ஆனால், நெகட்டிவ் மனிதர்கள் எல்லா தீர்வுகளுக்கும் ஏதோ ஒரு பிரச்னையுடன் காத்திருப்பார்கள்.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள்தாம்.சூழ்நிலையை மாற்றுங்கள்… அல்லது சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறிவிடுங்கள்.
மற்றவர்களுக்கு நல்லவராக இருப்பது முக்கியம்தான். அதைவிட முக்கியம், உங்களுக்கு நீங்களே நல்லவராக இருப்பது.
உங்களிடம் இல்லாதவற்றை நினைக்கிறபோதுதான் கவலை அதிகரிக்கிறது. இருப்பவற்றை மட்டும் நினைத்துப்பாருங்கள்; மட்டற்ற மகிழ்ச்சி கொள்வீர்கள்.
ஒரு நல்ல செய்தி… ஒரு கெட்ட செய்தி தெரியுமா? கெட்ட செய்தி – இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லை. நல்ல செய்தியும் அதுவே.
கடந்தவற்றைப் பற்றிக் கவலைப்படாதது, இருப்பதை நினைத்து நன்றியுணர்வு கொள்வது, நடக்கப்போவதை நினைத்து நம்பிக்கையோடிருப்பது – மகிழ்ச்சியான வாழ்க்கையின் மந்திரங்கள் இவை.

பப்ஜி விளையாட ஸ்மாட் போன் இல்லாததால் 18 வயது சிறுவன் தற்கொலை..!



ஸ்மார்ட் போன்களில் அவ்வப்போது வெளிவரும் விளையட்டுக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ப்ளூவேல் கேம் பெரம் வைரலாக பரவியது. இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் கடைசியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற பெரும் அதிர்ச்சி எல்லாம் கிளம்பியது. 

இதனால் அரசு இந்த விளையாட்டை விளையாட தடை விதித்தது. அதையும் மீறி சிலர் விளையான்டு தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனர். அதன் பின் இந்த விளையாட்டு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டு இந்த விளையாட்டு மீதான மக்களிடையே உள்ள ஆர்வம் ஒரளவிற்கு குறைந்தது. 


இந்நிலையில் தற்போது புதிதாக இளைஞர்களின் மனதை கெடுக்க வந்துள்ள விளையாட்டு பப்ஜி. இந்த விளையாட்டு லைவ்வாக மற்றவர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டே விளையாடும் விளையாட்டு என்பதால் இதை விளையாடுபவர்களை இதற்கு அடிமையாக்கி விடுகிறது. இப்படியாஜ பப்ஜிவிளையாட்டில் அடிமையாகிபோயுள்ளவர்கள் அதிகம் இருக்கின்றனர். 


இந்நிலையில் மும்பையில் 18வயது சிறுவன் தனது பெற்றோரிடம் பப்ஜி விளையாடுவதற்காக ரூ 37 ஆயிரம் மதிப்பிலான போனை வாங்கி தரும்படி கேட்டுள்ளான். ஆனால் அதற்கு அவர்கள் பெற்றோர் மறுத்துள்ளனர். 

இதனால் மனவேதனை அடைந்த அந்த சிறுவன் வீட்டில் உள்ள சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது தற்போது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு செல்போன் கேம் மீது உள்ள மோகம் தன் உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு ஒருவரை அடியமையாக்கி வைத்துள்ளது. 


தற்போது இந்த சிறுவனின் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் பலர் மத்தியில் இந்த பப்ஜிக்கும் தடை விதிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். 

துளசியின் மருத்துவ குணங்கள்




காடுகளில் வளரக்கூடிய அபூர்வ மருத்துவ குணங்கள் வாய்ந்த செடி துளசி. துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வராது. செரிமானம் அதிகரிக்கும், புத்துணர்ச்சியையும் துளசி மூலம் பெற முடியும். அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றிப் பார்ப்போம். 

துளசி ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு நோய் வராமல் தடுக்கலாம். 

கோடை காலங்களில் உடலின் வியர்வை துற்நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். 

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.




சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும். 

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. 

துளசி இலை சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். 

பெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி! நிச்சயம் தெரிந்துகொள்ளுங்கள்


சமீபகாலமாக ஒன் டைம் பாஸ்வேர்டு(OTP) என்று அழைக்கப்படும் கடவுச்சொல்லை வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து திருடுவதன் மூலம் அந்த நபரின் வங்கி கணக்குகளில் அவர்களுக்கு தெரியாமலேயே பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு பணம் திருட்டு நடைபெறுவது பெருகி வருகிறது. இந்த வகையான திருட்டில் இருந்து எப்படி மீள்வது, தப்பிப்பது
என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
இணைய மற்றும் மொபைல் வங்கி சேவைகளுக்கு ஒரு பாதுகாப்பு அம்சமாக இருந்து வருவதுதான் ஒன் டைம் பாஸ்வேர்டு(OTP). இந்த கடவுச்சொல் ஆனது பெரும்பாலும் 4 முதல் 6 இலக்கத்தில் ஒரு நபர் தனது வங்கி பரிவர்த்தனைகளை செய்யும்பொழுது அவரது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்த கடவு எண்ணை சரியாக உள்ளீடு செய்தால் மட்டுமே பரிவர்த்தனை முழுமை அடையும் வகையில் அனைத்து வங்கி சேவைகளும் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு ஒருவரது மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை அந்த நபருக்கு தெரியாமலேயே திருடுவதன் மூலமாகவோ அல்லது வங்கி அதிகாரி போல் போனில் பேசி ஒரு நபரின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண்களை பெற்றும் அப்போது பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வாடிக்கையாளருக்கு வரும் OTP எண்ணை கேட்டு பெறுவதன் மூலம் அந்த நபரின் வங்கி கணக்கை முழுமையாகவே கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சமீபத்தில் அதிகமாகி வருகிறது. 
சமீபத்தில் பெங்களூரில் ஒரு தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் ஒரே போன் காலில் மர்ம நபர் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மும்பை ஜார்கண்ட், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் பெருமளவில் அரங்கேறி வருகின்றன. கேரளாவில் மட்டும் இதுவரை பத்துக்கும் மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் இதைப்போன்று திருடப்பட்டுள்ளன. மேலும் மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வங்கி கணக்கை 28 முறை வங்கி அலுவலர் போல் பேசி அந்தப்பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 7 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்துள்ளனர்.
இதைப் போன்ற சம்பவங்கள் பெரும்பாலும் புதிதாக இணைய வழி வங்கி சேவையை துவங்குவோர், வயதானவர்கள் போன்றவர்களை குறிவைத்து அரங்கேற்றப்படுகிறது. இதைப் போன்ற கொள்ளை சம்பவங்களுக்கு முக்கிய காரணியாக இருந்து வந்தது OTP எண்கள் தான். இந்தப் OTP எண்களை இரண்டு வகைகளில் கொள்ளையர்கள் ஒரு நபரிடமிருந்து திருடுகின்றனர். 
அதில் ஒன்று, வங்கி வாடிக்கையாளர்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை தானாகவே படிப்பது. மற்றொன்று வங்கி வாடிக்கையாளர்களுக்கு கால் செய்து வங்கி அலுவலர் போல் பேசி அவருடைய வங்கி கணக்கு விவரங்களைப் பெற்று, மேலும் அவருக்கு வரும் OTP எண்ணை பகிர்ந்து கொள்ளும்படி கேட்பதன் மூலமும் இந்த கொள்ளை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இது குறித்த விழிப்புணர்வுகள் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் தேவை.
உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் குறுஞ்செய்திகளை தானாகவே படிப்பதற்காக பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை உங்கள் எண்ணிற்கு கொள்ளையர்கள் முதலில் அனுப்பி வைப்பர். அதிலுள்ள லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் எண்ணிற்கு வரும் அனைத்து மெசேஜ்களையும் அவர்களால் கண்காணிக்க முடியும். எனவே இதுபோன்ற உங்களுக்கு சம்பந்தமே இல்லாத கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் லிங்குகள் அனுப்பப்பட்டால் அதனை உடனே நீக்கிவிடுவது சிறந்தது.
அடுத்தது வங்கி அலுவலர் போல் பேசுபவர்களிடம் இருந்து எப்படி தப்புவது? உண்மையாகவே வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து உங்களுக்கு யாராவது கால் செய்தால் அவர்கள் நிச்சயம் உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளில் முழு விவரங்களை கேட்க மாட்டார்கள். குறிப்பாக CVV எண், கடவுச்சொல், உங்களுக்கு வரும் OTP எண் போன்றவைகளை கேட்க மாட்டார்கள். 
சில சமயங்களில் போன் கால்கள் மூலம் நீங்கள் டிக்கெட் புக் செய்யும் போதும், உணவு ஆர்டர் செய்யும் சமயங்களிலும் உங்களுக்கு எதிர்திசையில் உதவி புரியும் ஊழியர்கள் உங்களது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண்கள், பின் நம்பர், OTP போன்றவற்றை வார்த்தையால் சொல்லும்படி கேட்க மாட்டார்கள். மாறாக உங்களது மொபைல் கீபேடில் நீங்களே டைப் செய்யும்படி கூறுவார்கள். அப்படியில்லாமல் உங்களிடம் வார்த்தையால் கூறும்படி கேட்பவர்களிடமிருந்து நீங்கள் நிச்சயம் விழிப்பாய் இருக்க வேண்டும். அப்படி அவர்கள் கேட்கும் பட்சத்தில் உடனடியாக அந்த காலினை துண்டிப்பது உங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..


நம்பிக்கை!
நாம் அதிக நம்பிக்கை வைத்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் இதற்கு ஒத்து கொள்வோம். ஆனால், ஒரு சில மருத்துவர்கள் அறுவை சிகிச்சையில் பல தோல்விகளை கண்டிருப்பார்கள். இதை மருத்துவமனைகளும், அறுவை சிகிச்சை மருத்துவர்களும் ஒரு போதும் வெளிப்படுத்த மாட்டார்கள்.
ஏமாற்றம்!
பல மருத்துவமனைகள் போலித்தனமாகவே இந்த அறுவை சிகிச்சையை மாற்றி விட்டனர். அதாவது, மிக எளிதில் தீர்க்க வேண்டிய நோய்களை கூட அறுவை சிகிச்சை செய்தால் தான் குணமாகும் என கூறி, பணத்தை நம்மிடம் இருந்து கறந்து விடுவார்கள். இதில் சில நேரங்களில் மரணம் கூட நேரலாம்.
போலி மருத்துவர்கள்!
சில மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஆளில்லை என்பதற்காக ஆரம்ப கால மருத்துவர்களை வைத்து சிகிச்சை செய்கின்றனர்.
இது மிக மோசமான பாதிப்பை உண்டாக்கும். இது போன்ற நிலையை ஒரு போதும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் வெளிப்படுத்த மாட்டார்கள்.
உயிர்!
சில மருத்துவமனைகளில் புதுவித அறுவை சிகிச்சை எந்திரங்கள் வாங்கினால் அதை கூட உங்கள் மீது பரிசோதிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. இது போன்ற செயல்கள் பற்றி உங்களிடம் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கூற வாய்ப்பே இல்லை.
பணத்திற்காக!
சில அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மிகவும் திறமைசாலியாக இருப்பார்கள். ஆனால், எப்போதுமே அவர்கள் செய்யும் அறுவை சிகிச்சையை விட 10 மடங்கு பணத்தை கேட்பார்கள்.
இன்று இது போன்ற நிலை பலருக்கும் ஏற்படுகிறது. எதற்காக இவ்வளவு பணம் வாங்குகிறார்கள் என்பதை அறிய வேண்டியது நம் கடமையாகும்.
பரிசோதனை!
எப்போதும் ஒரே மருத்துவமனையை நாடாதீர்கள். ஒரு மருத்துவர் உங்களுக்கு மிக பெரிய நோய் இருக்கிறது என்று சொன்னால் அதை நினைத்து வருந்தாமல் மேலும் சில மருத்துவர்களிடம் பரிந்துரை கேளுங்கள்.
இது தான் உங்கள் உயிரை காப்பாற்றும் ஒரே வழி. ஏனெனில், உங்களின் இது போன்ற நிலையை பற்றி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பலர் உண்மையை இப்போதெல்லாம் சொல்வதில்லை.
மது!
அர்ஜுன் ரெட்டி படத்தில் காட்டுவது போன்ற சில சம்பவங்கள் நிஜ வாழ்க்கையிலும் நடக்க கூடும். அதாவது, சில அறுவை சிகிச்சை மருத்துவர்கள் முன்னிரவிலோ அல்லது அறுவை சிகிச்சை செய்ய போகும் முன்னரோ இது போன்று குடித்து விட்டு அதனால் ஏற்படும் விபரீதத்தை எப்போதுமே உங்களிடம் இருந்து மறைத்து விடுவார்கள்.
இதய பாதிப்பு!
அறுவை சிகிச்சை செய்யும் போது இதயம் சரியான அளவில் செயல்படுகிறதா? என்பதை அறுவை சிகிச்சையின் அவசரத்தில் சில சமயங்களில் தவறு நடக்க கூடும்.
இந்த நிலை உங்களுக்கு ஏற்பட்டால் மோசமானதுதான். இது போன்ற இதய பாதிப்பை உங்களிடம் பெரும்பாலும் மறைத்து விடுவார்கள்.
உங்கள் நிலை?
அறுவை சிகிச்சையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இதை வெளியில் கூறவே மாட்டார்கள். இந்த நிலை இன்று பல மருத்துவமனைகளில் நடந்து வருவதை நாம் கண் கூடாகவே பார்க்கலாம்.
என்ன நடக்கிறது?
அறுவை சிகிச்சை நடக்கும் இடத்தில் என்னதான் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள, அவர்கள் கூறும் குறிப்புகளை எழுதி வைத்திருக்கும் அந்த கையேடு தான் எல்லாவற்றிற்கும் பதிலாக இருக்கும்.
ஏனெனில், அறுவை சிகிச்சை மருத்துவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் இதில் தான் செவிலியர் ஒருவர் குறிப்பெடுத்து கொண்டே வருவார்.

சிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா?


மகாபாரதம் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே பகையால் ஏற்பட்ட குருசேத்திர போர் பற்றியது மட்டுமல்ல. அது வாழ்க்கை நெறிகளையும், பல உறவுகளின் முக்கியத்துவத்தையும், அழகியலையும் உணர்த்துவது ஆகும். மகாபாரதத்தில் பல அழகான உறவுகள் இருந்தது, அதில் முக்கியமான உறவு என்றால் கிருஷ்ணருக்கும், திரௌபதிக்கும் இடையே இருந்த உறவாகும். திரௌபதிக்கும், கிருஷ்ணருக்கும் இடையே இருந்த உறவு விவரிக்க முடியாத ஒன்றாகும்.
திரௌபதிக்கு இன்னல்கள் நேரும் போதெல்லாம் அதனை தீர்க்க அங்கே கிருஷ்ணர் இருப்பார். கிருஷ்ணரின் அறிவுரைகளே திரௌபதிக்கு பெரிய பலமாக இருந்து வந்தது. கிருஷ்ணருக்கு மொத்தம் 8 மனைவிகள் இருந்தனர்.
ஒருமுறை கிருஷ்ணரின் மனைவி சத்தியபாமா திரௌபதியிடம் ஐந்து கணவர்கள் இருந்தும் திரௌபதி அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதன் இரகசியம் என்னவென்று வினவினார். அதற்கு திரௌபதி கூறிய பதில் எக்காலத்திற்கும் பயன்படக்கூடியதாகும். திரௌபதி கூறிய அந்த வாழ்க்கை ரகசியங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அவர் அவராய் இருக்கட்டும்
திரௌபதி கூறுவது என்னவெனில் எந்த பெண்ணும் தன் கணவனை ஒருபோதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயலக்கூடாது. அவரை எப்பொழுதும் அவராக இருக்க விடவேண்டும். தன் கணவனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க சூனியம், தாந்திரீகம் போன்றவற்றை கையாளக்கூடாது. ஏனெனில் இது உங்கள் திருமண வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். பெண்களின் அன்பு மட்டுமே கணவரை கட்டிப்போடும் ஆயுதமாக இருக்க வேண்டும்.
அவரின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ஒரு பபுத்திசாலி மனைவிக்கான அடிப்படை குணம் தங்கள் கணவனுடைய குடும்பத்தை பற்றியும், அதில் இருப்பவர்களின் குணநலன்கள் பற்றியும் நன்கு தெரிந்து வைத்துக்கொள்வார்கள். இதனை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டாலே உங்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது.
தவறான நட்புகள்
திரௌபதியின் கூற்றுப்படி ஒரு பெண் வஞ்சம் மற்றும் பொய் பேசும் பெண்களுடன் எப்பொழுதும் நட்பாக இருக்கக்கூடாது. தவறான நட்புகள் கூட உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று திரௌபதி கூறுகிறார்.
மரியாதை
ஒரு பெண் எப்போதும் மற்றவர்களை அவமதிக்கக்கூடாது.தன் கணவரின் குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, வயதில் குறைவானவர்களாக இருந்தாலும் சரி அனைவரையும் மதித்து நடக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரின் மீதும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.
சோம்பறித்தனம் கூடாது
வேலைகளை செய்யும்போது சோம்பேறித்தனத்தை காட்டக்கூடாது. எந்தவொரு ஆணும் தன் மனைவி சுறுசுறுப்பாக இருப்பதையே விரும்புவார்கள் என்று திரௌபதி கூறுகிறார்.
அதிகமாக வெளியே இருக்கக்கூடாது
ஒரு பெண் எப்போதும் தன் அதிக நேரத்தை பால்கனி மற்றும் ஜன்னல் போன்ற இடங்களில் செலவிடக்கூடாது. ஏனெனில் இது அவர்களுக்கு சமூகத்தில் தவறான பிம்பத்தை உண்டாக்கும். குடும்ப உறவுகளுக்குள்ளும் விரிசலை ஏற்படுத்தும்.
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்
ஒரு பெண் தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் இல்லையெனில் அது அவர்களுக்கு பல பிரச்சினைகளை உண்டாக்கும். அதேசமயம் புதிய நபர்களுடன் அதிகமாக பழகுவதை தவிர்க்க வேண்டும் என்று திரௌபதி சத்யபாமாவிற்கு அறிவுரை கூறினார்.

அதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே!

டை ஆபரணங்கள் மட்டுமல்ல, தாங்கள் பயன்படுத்தும் ஹேண்ட் பேக்கைக்கூடப் பார்த்துப் பார்த்து வாங்குவார்கள் பெண்கள். பேக்கின் உள்ளே எத்தனை அடுக்குகள் இருக்கின்றன, எதையெல்லாம் எங்கெல்லாம் வைக்கலாம் என்று பார்ப்பார்கள். வாங்கிய சில நாள்களுக்குப் பிறகு கையில்வைத்திருக்கும் பொருள்களையெல்லாம் பையில் அடைத்துவிடுவார்கள். பொருள்கள் சேரச் சேர, பையின் எடையும் அதிகரிக்கத் தொடங்கும். `இப்படி அதிக எடையுள்ள பையைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதால், தோள்பட்டைவலி தொடங்கி, முதுகுத்தண்டுவட பாதிப்புவரை எக்கச்சக்க பிரச்னைகள் ஏற்படலாம்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.


“ஹேண்ட்பேக்கில் எதை வைக்க வேண்டும் என்றில்லாமல், அதிக எடையுள்ள பொருள்களை உள்ளே திணித்து, அவற்றை தினமும் சுமப்பது ஆரோக்கியமின்மைக்கான திறவுகோல். குறிப்பாக, ஒரு பக்கமாகப் பயன்படுத்தும் ஹேண்ட்பேக்கில் கனமான பொருள்களை வைத்து சுமப்பது ஆபத்தானது. இதுபோல தினமும் அதிக எடையைச் சுமக்கும் பெண்களுக்கு முதுமையைத் தொடும் முன்னரே எலும்புத் தேய்மானம் ஏற்படத் தொடங்கிவிடும்” என எச்சரிக்கிறார் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண் கண்ணன்.
ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு அவர் தரும் ஆரோக்கிய அறிவுரைகள் இவை…
எதில் கவனம் தேவை?
ஹேண்ட்பேக் மற்றும் அதன் உள்ளேவைக்கப்பட்டிருக்கும் பொருள்களின் எடை மற்றும் அளவு, ஸ்ட்ராப்பின் நீளம் போன்றவைதான் சம்பந்தப்பட்டவருக்கு உடல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, அவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீளம் அதிகமுள்ள, தடிமனான ஸ்ட்ராப் வகைகளைப் பயன்படுத்துவதே சிறப்பு.
* பை தயாரிக்க எந்த வகைத் துணி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுகூட பிரச்னையைத் தீர்மானிக்கும். தடிமனான தோல் அல்லது ரெக்ஸினால் செய்யப்பட்டிருந்தால், தசைகளில் அழுத்தமாகப் பதிந்து அந்தப் பகுதியில் வலியை ஏற்படுத்தும். பிரச்னை அதிகரிக்கும்போது, நரம்புகள் பாதிப்படைந்து அவை சார்ந்த பிரச்னைகளும் ஏற்படலாம். எனவே, தரமான மற்றும் எடை அதிகமில்லாத துணிகளில் தயாரித்த பைகளை மட்டுமே வாங்கவும்.

* ஒருபக்கமாக ஹேண்ட்பேக்கை மாட்டிக்கொண்டு சென்றால், தோள்பட்டையில் வலி ஏற்படுவதுடன், உடலின் அமைப்பிலும் மாற்றம் ஏற்படும். உதாரணமாக, வலது பக்கம் ஹேண்ட்பேக் தொங்கவிடுபவர்களுக்கு, காலப்போக்கில் வலது தோள்பட்டை சற்று கீழ்நோக்கியும், இடது தோள்பட்டை சற்று மேல்நோக்கியும் மாறும். இதன் காரணமாக, பின்முதுகுவலி, கழுத்துவலி, மூட்டுவலி போன்றவை ஏற்படலாம்.

* அதிக எடையுள்ள ஹேண்ட்பேக்கைச் சுமப்பதுதான் எல்லா பிரச்னைகளுக்குமான அடிப்படை. எனவே, தினமும் ஹேண்ட்பேக்கைச் சுத்தப்படுத்தவும். முடிந்தவரை வாரம் ஒரு முறையாவது சுத்தப்படுத்தவும். தேவையில்லாத பொருள்களை அகற்றவும்.
* பேருந்து, ரயிலில் உட்கார இடமில்லாமல் தோள்களில் பையைத் தொங்கவிட்டபடி, நின்றுகொண்டே பயணிப்பவர்கள் தோளில் ஒருபக்கமாகச் சுமந்து செல்வது ஆபத்தானது. வருடக்கணக்கில் இப்படிச் சுமைகளுடன் பயணப்பட்டால், தசைகளில் பிரச்னை ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக வலி எடுக்கத் தொடங்கும். இதனால் காலப்போக்கில் தசைப்பிடிப்பு, பின்முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுத் தேய்மானம், குடலிறக்கம், டிஸ்க் தேய்மானம் போன்றவை ஏற்படக்கூடும். தீவிரமான தலைவலி ஏற்படுவது இவற்றின் முதல்நிலை. அதைத் தொடர்ந்து, தேவையில்லாத மனஉளைச்சல் ஏற்படக்கூடும்.
25, 30 வயதைத் தொடும் இளம்பெண்கள்கூட தாங்க முடியாத கழுத்துவலியால் அவதிப்பட இதுவும் ஒரு காரணம்.

* கழுத்துவலியோ, தோள்பட்டைவலியோ எதுவாக இருந்தாலும், அதை உதாசீனப்படுத்த வேண்டாம். இவற்றில் மூட்டு சார்ந்த பிரச்னைகளைக் குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அந்த வகையில், முதல்நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்தும் வேலையைத் தொடங்குவதே நல்லது.
ஹேண்ட்பேக் நிர்வாகம் தெரியுமா?
முதலில் தேவையானவை, தேவையில்லாதவை என உங்களிடம் உள்ளவற்றைப் பிரித்துவைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் பையை, இரண்டாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒருபுறம் அத்தியாவசியத் தேவைகளையும், மற்றொருபுறம் ஆடம்பரத் தேவைகளையும் வைப்பது நல்லது. இங்கு ஆடம்பரப் பொருள்கள் என்பவை, தற்காலிகமாகவோ குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமோ வைத்திருக்கும் பொருள்கள். இது ஒவ்வொருவரின் தேவையைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக, சிலருக்கு சன்கிளாஸ் அத்தியாவசியம், அது சிலருக்கு ஆடம்பரம். எனவே, தனிநபர் விருப்பத்தைப் பொறுத்து, பொருள்களைப் பிரித்துக்கொள்ளுங்கள்.
அத்தியாவசியப் பொருள்களின் அளவைப் பொறுத்து, அதற்கேற்ற பை வாங்கிக்கொள்ளுங்கள். தற்காலிகமாக இருக்கும் பொருள்களை, அவ்வப்போது சுத்தப்படுத்துங்கள். வேண்டாமென்பதை, தாமதிக்காமல் நீக்கிவிடுங்கள். ஒவ்வொரு நாளும் இப்படிப் பிரித்துவைத்து, பையை அடுக்குவது நல்ல பழக்கம். தினமும் நேரம் கிடைக்காதவர்கள், வாரக் கடைசியில் பையைச் சுத்தப்படுத்தும் பணியை வைத்துக்கொள்ளுங்கள்.
ஹேண்ட்பேக் தேர்ந்தெடுக்கும்போது…
* முடிந்தவரை இரண்டு கைகளுக்கும் பொருந்தும் பைகளைப் பயன்படுத்தவும். ஒருபக்கப் பை என்றால், நீளமான பைகளாக வாங்கிக்கொள்ளவும். அதை வலமிருந்து இடமாகவோ, இடமிருந்து வலமாகவோ மாட்டிக்கொள்ளவும்.
* ஒருபக்கப் பைகளை, இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி, சமமான நேரம் தொங்கவிட வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் கைகளை மாற்றிக்கொள்வது சிறப்பு. பை இருக்கும் தோள்பட்டையில் வலி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டால், உடனடியாகக் கையை மாற்றிக்கொள்ளவும்.
* தடிமனான ஸ்ட்ராப்கொண்ட, நீளமான ஹேண்ட்பேக் வகைகளைப் பயன்படுத்தவும்.
* ஒருபக்க ஹேண்ட்பேக்கில், இடுப்புக்கு அருகே பையின் அடிப்பகுதி வருமாறு இருக்க வேண்டும். அந்தளவுக்கு நீளம் அவசியம்.
* எடை அதிகமுள்ள பொருள்களை, பையின் அடிப்பகுதியில் வைத்துக்கொள்ளவும். எடை குறைவான பொருள்கள், மேலே இருக்க வேண்டும்.

வலியைப் போக்கும் பயிற்சிகள்!
வலி ஏற்படாமலிருக்க, கழுத்துப் பகுதிக்கான கீழ்க்காணும் உடற்பயிற்சிகளைச் செய்துவரவும்.
* வலமிருந்து இடம், இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என 30 விநாடிகளுக்குக் கழுத்தை மெதுவாகச் சுழற்றி பயிற்சி செய்யவும். பயிற்சி செய்யும்போது நன்றாக மூச்சை உள்ளிழுத்து, வெளியேவிடவும்.
* முதுகுத்தண்டு நிமிர்ந்தபடி, கால்கள் தரையில் பதியுமாறு அமரவும். வலது கன்னத்தில் வலது கையை வைத்துக்கொண்டு, மெதுவாக இடது பக்கம் கழுத்தைத் திருப்பவும். ஐந்து நொடிகளில் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி வலது, இடது என இரண்டு பக்கமும் செய்யவும்.
* முதுகுத்தண்டு நிமிர்ந்து, கால்கள் பதியும்படி நாற்காலியில் அமர்ந்து,  இரு கைகளையும் கோத்துக்கொள்ளவும். கட்டை விரல்களைத் தாடையின் அடியில் வைக்க வேண்டும். தாடையில் கைவைத்தபடியே கழுத்தை மெதுவாக மேலே தூக்க வேண்டும். பிறகு, பழையநிலைக்கு வர வேண்டும். இதேபோல, தலையின் பின்புறம் கைகளைக் கோத்து, கழுத்தை மெல்லக் கீழே அழுத்த வேண்டும்; பழையநிலைக்கு வர வேண்டும்.


எலும்புகளை கவனியுங்கள்!
ம் எலும்புகளுக்குத் தேவையான அன்றாட கால்சியத்தைப் பெற ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் போதுமானது. 30 வயதுக்குப் பிறகு நம் எலும்புகளின் அடர்த்தி மெள்ள மெள்ளக் குறைய ஆரம்பிக்கும். எனவே, தினமும்  1,000 மி.கிராம் கால்சியம் எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.