Monday, February 18, 2019

தொப்புள் கொடி வழியே வரும் தொற்று!


பிறந்தது முதல் ஐந்து வயது வரை, எலும்பு – மூட்டுகளில் ஏற்படும் தொற்று பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை.

பிறந்தவுடன் குழந்தைகளுக்கு ஏற்படும், இது போன்ற தொற்று, தொப்புள் கொடி வழியே பரவும். சில சமயங்களில், அம்மாவின் பிறப்புறுப்பில் உள்ள தொற்று குழந்தையை பாதிக்கலாம். பிறந்த குழந்தைக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும்; அதனால்,தொற்று எளிதாக ஏற்படுகிறது.
ஒரு வயது, இரண்டு வயதில், ஜலதோஷம், காதில் சீழ், மார்புச் சளி, சிறுநீர் தொற்று ஏற்பட்டால், பாக்டீரியாக் கிருமிகள் ரத்தத்தில் பரவி, எலும்பு, மூட்டுக்களுக்கும் பரவலாம்.

ஒரு வயதிற்கு மேல், குழந்தை ஓடியாடி விளையாடும் போது, மென்மையான கால்கள், பாதங்களில், அடிபட்டால் ஏற்படும் காயங்கள் வழியே, கல், மண் உள்ளே செல்வதால் ஏற்படும் தொற்றுக் கிருமிகள், ரத்தத்தின் வழியே, எலும்பு, மூட்டுகளையும் பாதிக்கலாம்.

எலும்பு வலுப்பெற…

குழந்தை, ஓடியாடி விளையாடுவது, அதிலும் சூரிய ஒளியில் விளையாடுவது மிகவும் அவசியம். அப்போது தான், வைட்டமின் – டி கிடைத்து, கால்சியம் சத்தை, முழுமையாக உடல் கிரகிக்கும். கால்சியம் நிறைந்த, சமச்சீரான ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும்.

எப்படி கண்டுபிடிப்பது?

காய்ச்சல் இருக்கும் சமயத்தில், கை, கால்களை உதைத்து விளையாடிய குழந்தை, அசையாமல் இருப்பது, திடீரென்று நடக்க முடியாமல் போவது, மூட்டுக்களை தொட்டவுடன் வலியால் அழுவது ஆகியவை, உடனடியாக கவனிக்க வேண்டியவை. 

தொற்று காரணமாக, குழந்தையின் மூட்டுகளில், சீழ் பிடித்தால், 24 மணி நேரத்திற்குள் சுத்தம் செய்து, தேவையான சிகிச்சை தர வேண்டும். இல்லையென்றால், மூட்டு முழுவதும் கெட்டுப் போய், வாழ்நாள் முழுவதும் முடமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

துவக்கத்திலேயே சிகிச்சை செய்தால், மருந்தினாலேயே குணப்படுத்த முடியும். பிரச்னை பெரிதானால், அறுவை சிகிச்சை செய்து, சீழ் முழுவதையும் அகற்றி, மருந்து தர வேண்டும்.

டாக்டர் ஆர்.சங்கர், குழந்தைகள் எலும்பு, மூட்டு மருத்துவர், சென்னை.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .